புதுக்கோட்டை தேர் விபத்து; யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை - அமைச்சர் சேகர் பாபு
புதுக்கோட்டையில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது குறித்து விசாரிக்க கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேசுவரர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பக்தர்கள் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்து குறித்து, தேருக்கு கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜி.ராஜேந்திரன், பி.வைரவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான தேரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சக்கரத்தின் அடியில் திடீரென மரக்கட்டையை வைத்து தடுத்ததால் குப்புறசாய்ந்துவிட்டது என தெரிவித்தனர். மேலும் தேர் கவிழ்ந்த இடத்தை பார்வையிட்டார். அதன்பின் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதிகாரிகள், கோவில் குருக்களிடம் தேர் கவிழ்ந்ததற்கான காரணம் என்ன? என கேட்டறிந்தார். அதன்பின் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 பக்தர்களையும் அவர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் நிவாரண நிதியாக தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். அதன்பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியபோது, தேர் விபத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதுபற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர் விபத்து தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 981 தேர்கள் உள்ளன. 65 தங்கத்தேர்களும், 49 வெள்ளித்தேர்களும் பயன்பாட்டில் உள்ளது. எல்லா தேர்களிலும் விபத்து ஏற்படுவதில்லை. ஒரு சில இடங்களில் பல்வேறு காரணங்களால் விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த தேரோட்டத்திற்கு கூட பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, காவல்துறையிடம் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விபத்து நடந்துள்ளதற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளேன். தேரை முழுமையாக பராமரித்த பின் நல்ல நாளில் மீண்டும் தேர் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்