புதுக்கோட்டை மாவட்ட ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 42 பேர் காயம்
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், காளைகள் முட்டியதில் 42 பேர் காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், லெட்சுமணன்பட்டியில் பிரசித்தி பெற்ற பச்சநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு திடலில் நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை, விராலிமலை, ஆவூர், திருச்சி, மணப்பாறை, கரூர், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 606 காளைகளும், 127 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் 25 நபர்கள் கொண்ட குழுக்களாக பிரித்து ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக ஜல்லிக்கட்டு திடலில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து விலங்குகள் நலவாரிய ஆய்வுக்குழு உறுப்பினரும், ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலருமான மிட்டல், இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து வாடிவாசலுக்கு பின்புறம் அட்டியலில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்து சென்றது.
மேலும் சில காளைகள் களத்தில் நின்று சுழன்று சுழன்று முடிந்தால் பிடித்துப்பார் என்று மிரட்டியது. சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. அப்போது அங்கு இருந்த ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள், ரசிகர்கள் கைத்தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர் உள்பட 42 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த மாடுபிடி வீரர்கள் எலந்தபட்டி சரத்குமார் (வயது 24), தெற்குதுவரவயல் பாண்டி (24), பார்வையாளர்கள் தொண்டைமான் நல்லூர் சாமிக்கண்ணு (65), ஆலங்குடிபட்டி அருண்குமார் (23), திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரவிந்தன் (14), ஆயிப்பட்டி தேவராஜ் (45), காளையின் உரிமையாளர்கள் தொண்டைமாநல்லூர் மணிமுத்து (28), தஞ்சாவூர் கருப்பன் (26), செங்குறிச்சி பாலகிருஷ்ணன் (27) ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருச்சி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குக்கர், மிக்சி, மின்விசிறி, சில்வர் அண்டா, தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்க பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை, கீரனூர், விராலிமலை, சூரியூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள், தடுப்பு கட்டைகள், ஆகியவற்றில் அமர்ந்து கண்டுகளித்தனர். பாதுகாப்பு பணியில் கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செங்குட்டுவேலன் தலைமையில் மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.