முதல்வர் மு.க.ஸ்டாலின் தானே பதவி விலக வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்கள் போராட்ட குழு சார்பாக 21ஆம் தேதி மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்ட குழு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பி. ஆர். பாண்டியன், அய்யாக்கன்னு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர். பாண்டியன் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்ப பெற்றதை ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும். நிலம் விவசாயிகள் ஒப்புதல் இன்றி அபகரிப்பதை தடுக்க இயலாது என்பதை அச்சுறுத்தும் வகையில் விளக்குகிறது. குறிப்பாக புஞ்சை நிலங்கள் கைப்பற்றுவதை எதிர்க்கக் கூடாது என்கிற அடிப்படை நோக்கோடு இந்த வழக்கு திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அருள் மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறு பிரச்சாரங்கள் தவறான முன்னுதாரணமாகும். அவரது சொந்த மாவட்டம் கிருஷ்ணகிரி என்றும் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை தடுப்பதற்கு போராட்டங்களை தூண்டுகிறார் என்கிற கருத்து ஒட்டுமொத்த விவசாய அமைப்புகளின் போராட்ட உணர்வுகளை மழுங்க செய்துவிடும். இச்செயலானது விவசாயிகளுடைய ஒற்றுமையை அரசியல் உள்நோக்கத்தோடு பிரித்தாளும் சூழ்ச்சியின் வெளிப்பாடாக தெரிகிறது. இந்த செயலை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக திரும்ப பெற வேண்டும். அருள் மீது போடப்பட்டிருக்கிற குண்டர் சட்டம் என்பது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள் சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்காக நாங்கள் பார்க்கிறோம். எனவே அருள் மீது போடப்பட்ட வழக்கையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற அனைத்து விவசாயிகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் அவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.
குண்டர் சட்டம் சட்ட விரோதமாக போடப்பட்டதை நியாயப்படுத்தும் விதத்தில் மாவட்ட காவல்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தாரிடம் கள்ளச்சாராயம் விற்றதாகவும், பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், அதன் அடிப்படையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒப்புதல் பெற கையொப்பம் பெற்று உள்ளதாக தெரிவிக்கிறார்கள். இது விவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கும் அச்சுறுத்தலுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை ஆகும். அவ்வாறு பெறப்பட்ட கடிதங்கள் உண்மையாக இருக்குமேயானால் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் அதனை திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். அது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும், அதே நேரத்தில் வழக்கை திரும்ப பெறுவதற்கு அம் மாவட்டத்தைச் சார்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மூலம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பெறப்பட்டுள்ள கடிதம் விவசாயிகளின் ஜனநாயக உரிமையை பறிக்கும் உள்நோக்கம் கொண்டது. குறிப்பாக இனி சிப்காட் அமைப்பதற்கு எதிராக போராட மாட்டோம். விளை நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க மாட்டோம் என்கிற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் குடும்பத்தாரிடம் உறுதிமொழி கடிதம் பெற்று அதன் அடிப்படையில் வழக்கை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது, ஒட்டுமொத்த விவசாயிகளின் ஜனநாயக குரல் வளையை நெறிக்கும் செயலாகும். இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக அந்த கருத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும்.
நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023யை திரும்ப பெற்றிட வேண்டும்..
தமிழ்நாட்டில் விவசாயிகள் ஒப்புதல் இன்றி 18 மாவட்டங்களில் புஞ்சை நிலங்களை அபகரித்து சிப்காட், பரந்தூர் விமான நிலையம், ONGC ஹைட்ரோகார்பன் கிணறு அமைப்பதற்கும், NLC நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கும் தேவையானால் நஞ்சை நிலங்களையும் விவசாயிகள் ஒப்புதல் இன்றி கையகப்படுத்தி கொள்ளும் வகையிலும், ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர் ஆதாரங்கள், ஆறுகள் பாசன கன்மாய்கள் உள்ளிட்ட நீர்வழிப் பாதைகளை தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் தனக்கு தேவையான வகையில் ஆக்கிரமிப்பு செய்து கொள்வதற்கும். நீர் வழி பாதைகளை மாற்றம் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 உடனடியாக திரும்ப பெற வேண்டும் வலியுறுத்தினார். மேலும் இச்சட்டம் நிறைவேற்றப்படுமேயானால் ஒட்டுமொத்த தமிழக விவசாயமும் நிலத்தடி நீரும் நீராதாரத் திட்டங்களும் குடிநீர் ஆதாரமும் அடியோடு பறிபோகும் பேராபத்து ஏற்படும் என எச்சரிக்கிறது.
குறிப்பாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவர்கள் மூவரும் விவசாயிகளை வஞ்சிக்கும் உள்நோக்கோடும், போராட்டங்களை ஒடுக்கும் வக்கிர புத்தியோடும், கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக நிலங்களை அபகரிக்கும் வகையில் உள்ளது. இவர்கள் இந்நடவடிக்கைக்கு முழுபொறுப்பேற்க வேண்டும். இவர்களை பதவி நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து நவம்பர் 21ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதும், இதனை தொடர்ந்து நவம்பர் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளுக்கு கொடுத்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல், அதற்கு எதிர்மறையாக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. திமுக அரசு விவசாயிகளை ஜனநாயக படுகொலை செய்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடந்து கொள்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் செய்த தவறுகளை உணர்ந்து , தானே முன்வந்து பதவி விலக வேண்டும்.
உடனடியாக விவசாயிகள் மீது நடத்தப்படும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். அதேசமயம் 3- வது சுரங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நேரத்தில் எங்களுடைய முடிவுகள் திமுக அரசிற்கு எதிராக இருக்கும். மேலும் தேர்தல் களத்தில் நாங்கள் இறங்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு தெரிவித்தார்.