லஞ்சம் வாங்குவது பிச்சை பெறுவதற்கு சமம் - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பேச்சு
தங்களுடைய ஆடம்பர செலவிற்காக பிறரிடம் லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பேச்சு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்வேறு அரசு துறைகளில் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவது வாடிக்கையாக இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் லஞ்சம் பெறுவது குற்றம் இத்தகைய செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்சம் பெற்ற அரசு துறை அதிகாரிகள் மீதும் அலுவலர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் தங்களுடைய நியாயமான வேலைக்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது முற்றிலும் தவறு, அவ்வாறு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக அருகில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மக்களிடையே பலகட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும் போது அதை வைத்து அளவான, அழகான, எளிமையான வாழ்க்கையை மகிழ்வோடு வாழ முடியும். அதையும் தாண்டி ஆடம்பர தேவைகளுக்காக பிறருக்கு நியாயமாக செய்ய வேண்டிய செயல்களுக்கு லஞ்சம் பெறுவது, பிச்சை பெறுவதற்குச் சமம் என்று விழிப்புணர்வுக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் கூறினார். பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் சார்பில், ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், பெரம்பலூர் நகரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற் றது. 'ஊழலை மறுப்போம், தேசத்தைக் காப்போம்" என்ற பொருண்மையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில் , “ஊழல் ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தாலும் மாணவர்களிடம் நடத்துவது மிகவும் சிறப்பானது ஆகும். எதிர்காலத்தை கட்டமைக்கும் வலிமை கொண்டவர்களாக விளங்கும் மாணவ, மாணவிகள் நீங்கள் லஞ்சம் வாங்குவது குற்றம் என்பதை உணர்ந்தவர்களாக மற்றவளுக்கும் உணர்த்துபவர்களாக இருக்க வேண்டும். நாம் பார்க்கும் வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்போது அதை வைத்து அளவான, அழகான,வ்எளிமையான வாழ்க்கையை மகிழ்வோடு வாழ முடியும். அதையும் தாண்டி நம் ஆடம்பர தேவைகளுக்கு பிறருக்கு நியாயமாக செய்ய வேண்டிய செயல்களுக்கு லஞ்சம் பெறுவது நாம் அவர்களிடம் பிச்சை பெறுவதற்கு சமம்” என்றார்.
மேலும், "செய் தக்க அல்ல செயக்கெடும் செய் தக்க செய்யாமை யானுங் கெடும்” என்றார் திருவள்ளுவர். செய்யக் கூடாததை செய்தாலும் குற்றம், செய்ய வேண்டியதை
செய்யாமல் இருந்தாலும் குற்றம் என்பதே பொருள் ஆகும் என கூறினார். அதேபோல நாம் நமது கடமைகளில் இருந்து தவறாமல், நேர்மை பிறழாமல் வாழ முன்வர வேண்டும். ஊழலற்ற சமுதாயத்தை கட்டமைக்க மாணவர்களின் பங்கு இன்றியமையாதது” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹேமச்சந்திரா, கல்லூரி முதல்வர் பெரியசாமி, பள் ளித் தலைமை ஆசிரியர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.