பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமம் 3-வது வார்டு, காலனி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் நந்தினி(வயது 16). தமிழ்ச்செல்வி எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தின்பண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நந்தினி, எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயின்று அரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு, தற்போது கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் மணிகண்டன், தமிழ்ச்செல்வி வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மதியம் 1.45 மணியளவில் வேலை முடிந்து மணிகண்டன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் நந்தினி பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நந்தினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணையில், நந்தினியும், பெரம்பலூர் ரெங்கா நகர் 3-வது குறுக்கு தெருவில் வசிக்கும் சரவணனின் மகன் சஞ்சய் ரோஷன் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நந்தினி மீது சஞ்சய் ரோஷன் சந்தேகப்பட்டதால் கடந்த 28-ந்தேதி இரவு முதல், அவர்கள் 2 பேரும் செல்போனில் பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக நந்தினியின் தாய் தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின்பேரில், சஞ்சய் ரோஷன் மீது நந்தினியை தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வந்தனர். ஏற்கனவே சஞ்சய் ரோஷன் ஒரு கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை தாம்பரம் மாநகரில் மண்மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பழைய பங்களாவில் சஞ்சய் ரோஷன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் தனது காதலி தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்து தானும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்