மன்னிச்சிடுங்க பிரதர்.. எழுதிவைத்துவிட்டு டூ-வீலரை திருடிய மர்ம நபர்கள்.. என்னங்க இது?
திருச்சி மாவட்டம் ,துறையூர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டில் பணம் , இருசக்கர வாகனம் திருடிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதால் 24 மணி நேரமும் காவல்துறையினர் பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளர்.
மேலும் சந்தேகப்படும்படி நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனடியாக அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், துறையூர் - பெரம்பலூர் புறவழிச்சாலை அருகே உள்ள செல்வம் நகரை சேர்ந்தவர் இளங்கோ, இவர் துறையூரில் இயங்கிவரும் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும், அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் இளங்கோவுக்கு, மஞ்சு என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் குடும்பத்தோடு தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சொந்த ஊரில் சில தினங்களை கழித்தவர், தனது குடும்பத்தோடு மறுபடியும் துறையூருக்கு வந்துள்ளார். அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டுக்குள் சென்று அவர் பார்த்தபோது, மர பீரோ உடைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளார்.
அதில் பணம் எதுவும் இல்லாததால், திருட வந்த மர்ம நபர்கள், தனது குழந்தைகள் பணம் சேர்த்து வைத்திருந்த உண்டியலை எடுத்து சென்றிருப்பதை பார்த்துள்ளார்.
திருச்சி அருகே டூ-வீலர் திருடிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
மேலும், அங்கு திருட வந்த மர்ம கும்பல், வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் துணிகளை களைத்து போட்டு, பணம், நகை இருக்கிறதா என்று தேடியிருக்கின்றனர்.
அங்கு எதுவும் கிடைக்காததால், அந்த உண்டியலையும், வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த டி.வி.எஸ் ஜூபிடர் என்ற இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் பணம், நகை எதுவும் கிடைக்காத விரக்தியில் அந்த மர்ம நபர்கள் வீட்டின் சுவற்றில் கிரேயான் பென்சிலால், 'சாரி சிஸ்டர் ஆர் பிரதர்... மன்னித்து விடுங்கள்' என்று எழுதி வைத்திருந்ததை பார்த்து மேலும் இளங்கோ அதிர்ச்சியடைந்தார். இதனால், இது பற்றி இளங்கோ உடனடியாக துறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரின் பேரில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இளங்கோ தனது புகாரில் மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற உண்டியலில் ரூ.2,000 வரையும், அவர்கள் திருடிச் சென்ற பைக்கின் விலை ரூ. 1 லட்சம் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திருட வந்த இடத்தில் மர்ம நபர்கள், 'மன்னித்து விடுங்கள்' என்று எழுதி வைத்துவிட்டு டூவீலரை திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது .
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.