காலாவதியான மருந்துகளை திரும்பப்பெறுக.. நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவு..!
லட்சக்கணக்கான தரமற்ற, காலாவதியான மருந்துகளை திரும்பபெற, நிறுவனங்களுக்கு மருத்துவ பணிகள் கழகம் உத்தரவு.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் வாங்கப்பட்ட மருந்துகளில் தரம் இல்லாத மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு மருந்து விநியோக நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 24 மருத்துவ கல்லூரிகளில், 50 மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், ஒரு அரசு பல்நோக்கு உயர்சிறப்பு, ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம், வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்புற சமுதாய மையங்கள் என்று செயல்பட்டுவருகின்றன. இந்த மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம்தான் வாங்கப்படும். இதைத் தவிர்த்து மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவைகளும் வாங்கப்படும்.
இதில் குறிப்பாக மருந்துகள் வாங்கும்போது பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி தற்போது கடந்த ஆண்டு நிலவரப்படி 315 அத்தியாவசிய மருந்துகள், 366 மருத்துவ அறுவை மற்றும் தையல்நுகர் பொருட்கள், 517 சிறப்பு மருந்துகளை அரசு மருத்துவ நிறுவனங்களுக்காக கொள்முதல் செய்யப்படுகிறது. மருந்துகள் பயன்பாட்டின் அடிப்படையில் குறைந்தபட்ச இருப்பு 3 மாதம் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டு அதற்கு ஏற்றாற்போல் தேவைக்கேற்ப மட்டுமே கொள்முதல் செய்து மாவட்ட வாரியாக உள்ள 32 மருந்து கிடங்குகளில் இருப்பு வைத்து வழங்கப்படுகிறது.
இவ்வாறு பல மருந்து விநியோக நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு மருந்துகள் வாங்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மூலம் வாங்கப்பட்ட மருந்துகளில் தரம் இல்லாத மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு மருந்து விநியோக நிறுவனங்களும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மருந்து விநியோக நிறுவனங்களும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, மாவட்ட மருந்து கிடங்குகளில் உள்ள கலாவதியான மற்றும் தரமற்ற மருந்துகளை திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தும் யாரும் மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் மற்ற மருந்துகளை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே இறுதியாக மாவட்ட மருத்துவ கிடங்களில் உள்ள காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவமனை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Follow@GoogleNews: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
உங்களின் சொந்த செலவில் இந்த மருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்துகளை அனுப்புவதற்கு முன்பாக மருந்து எடுத்துkகொண்டு செல்லும் நபர் பெயர், கொரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் இமெயில் முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாவிடில், அந்த மருந்துகள் அனைத்து அழிக்கப்படும். இதற்கான தொகை சம்பந்தபட்ட மருந்து விநியோக நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும், என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.