![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திகார் சிறைக்கு பழனிசாமியை அனுப்பும் ரகசியத்தை உரிய நேரத்தில், இடத்தில் கூறுவோம் - திருச்சியில் ஓ.பி.எஸ். பேச்சு
கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக 3 மாதத்தில் உரிய விசாரணை நடத்தி முடிப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் தான் கூறினார். ஆனால், அதனை ஏன் தாமதப்படுத்துகின்றனர்- ஓ பன்னீர்செல்வம் கேள்வி.
![திகார் சிறைக்கு பழனிசாமியை அனுப்பும் ரகசியத்தை உரிய நேரத்தில், இடத்தில் கூறுவோம் - திருச்சியில் ஓ.பி.எஸ். பேச்சு OPS says We will tell the secret of sending Palaniswami to Tihar Jail at the right time and place Speech in Trichy - TNN திகார் சிறைக்கு பழனிசாமியை அனுப்பும் ரகசியத்தை உரிய நேரத்தில், இடத்தில் கூறுவோம் - திருச்சியில் ஓ.பி.எஸ். பேச்சு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/fb0a42e78737d5cd7d971f9dfa2c22731704951499643184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் தெய்வீக ஆசியோடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி விஎஸ்எம் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் பேசியது... பழனிசாமி ஆட்சியின் போது 4 பேரை வைத்துக் கொண்டு படாதபாடுபட்டேன் என்று கூறியதை யாரை என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் கேட்ட பொறுப்பை எல்லாம் கொடுத்தோம். ஆனால், எந்தத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
வரும் தேர்தல் பார்லிமெண்ட்டுக்கான, இந்திய தேசத்தை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை அளித்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சி 3வது முறையாக மீண்டும் வருவதற்கு முழு ஆதரவாக இருப்போம். லோக்சபா தேர்தல் குறித்து முறைப்படி கூட்டணி அமைத்த பின்னரே எந்தெந்த கட்சிகள் என்பது குறித்து அறிவிக்கப்படும்.
அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் கட்சி. அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால், ஏன் அதை பழனிசாமி தடுக்கிறார் என்று அவர்கள் தான் கேட்கின்றனர். அதற்குக் காரணம் சுயநலம். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட 50 ஆண்டுகால சட்ட விதியை மாற்றலாமா? பழனிசாமி தரப்பில் இருப்பவர்கள் மனவேதனையோடு என்னிடம் பேசுகின்றனர். நாங்கள் என்ன சொன்னாலும் அவர் கேட்கமாட்டேன் என்கிறார். எல்லாம் எனக்குத்தெரியும் என்கிறார் என்று கூறுவதாக மனவருத்தத்தோடு கூறுகின்றனர்.
கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக 3 மாதத்தில் உரிய விசாரணை நடத்தி முடிப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் தான் கூறினார். ஆனால், அதனை ஏன் தாமதப்படுத்துகின்றனர், அவர்கள் இருவரும் கூட்டணி வைத்துள்ளனரா என்று மக்கள் கேட்கின்றனர். அதைத்தான் நானும் கேட்கின்றனர். இருதரப்பிலும் உள்ள நிர்வாகிகள் குறித்து இணையும் நேரத்தில் பேசிக்கொள்வோம். இப்போதே சண்டையை மூட்டி விடாதீர்கள்.
நாட்டின் அடுத்த யார் பிரதமர் என்ற கேள்வியும், மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற கருத்தும் பொதுவாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆண்டிகள் கூடி கட்டிய மடம். திகார் சிறைக்கு பழனிசாமியை அனுப்பும் ரகசியத்தை உரிய நேரத்தில், இடத்தில் கூறுவோம்.
அதிமுக விவகாரம் குறித்து தற்போது வழங்கப்பட்டுள்ளது அனைத்து தற்காலிக தீர்ப்பு தான். 19ம்தேதி மீண்டும் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. ஆரம்பத்தில் பொதுக்குழுவில் இருந்து அனைத்து அம்சங்களையும் எடுத்துக் கொள்வோம் என கூறியிருக்கின்றனர். அதில், என்ன வருகிறதோ, அதனை எடுத்துக்கொண்டு நீதிக்கு தலை வணங்குவோம். சுப்ரீம்கோர்ட் யாருக்கும் சின்னம் வழங்கவில்லை. லோக்சபா தேர்தலில் இறைவன் கொடுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். கோர்ட் தீர்ப்புகளால் நாங்கள் சோர்ந்துவிடவில்லை. எங்கள் இலக்கும், நோக்கமும் நியாயமானது. அதனால் நாங்கள் சோர்வடையத் தேவை இல்லை. சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் இருந்த கட்சிகள் எங்கள் அணியில் இருக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணம் நிறைவேறும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார். மேலும், பேட்டியின் போது, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)