Independence Day 2023: திருச்சியில் சிதலமடைந்து காணப்படும் தேசிய சின்னம் - ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் வைத்த கோரிக்கை
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள நமது தேசிய சின்னம் சிதலமடைந்து இருப்பது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தேசியச் சின்னம் என்பது அரசு முத்திரைகள், ரூபாய், நாணயம் போன்றவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்திய அரசு மற்றும் இந்தியக் குடியரசின் சின்னமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர், அதன்மேல் நான்கு சக்கரங்களை பக்கவாட்டில் கொண்ட முரசு போன்ற அமைப்பு கொண்டது. இதில் உள்ள சக்கரங்களை தர்ம சக்கரங்கள் எனப்படுகின்றது. குறிப்பாக வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அசோகரால் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பல தூண்கள் நிறுவப்பட்டன. இவற்றில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் தூண் சாரநாத் தூண் ஆகும். இது கி.மு.250 ஆம் ஆண்டுகளில் சாரநாத்தில் உருவாக்கப்பட்டது. புத்தர் தமது முதல் போதனைகளை சாரநாத்தில் வெளியிட்டார். ஆகவே அவ்விடத்தில் அசோகர் ஒரு உயரமான கல்தூணை நிறுவினார். அதன் உச்சியில் சிங்கங்களும்,மற்ற உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கம்பீரமாக நான்கு சிங்கங்கள், அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம் (Dharma Chakra) உள்ளது. இந்த கல்தூண் தற்போது உத்திரப்பிரதேசத்தில் வாரனாசியின் புறநகரப் பகுதியான சாரநாத்தில் உள்ள சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தூணில் நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நிற்கின்றன. இவை அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை ஆகிய நான்கு பண்புகளைக் குறிக்கின்றன. இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுவப்படுள்ளன. இந்த பீடத்தின் கிழக்கில் யானை, மேற்கில் குதிரை, தெற்கே எருது, வடக்கில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவத்தில் அமைந்துள்ளது. மலர்ந்த தாமரை மலரும் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. தூணின் மகுடமாக தர்ம சக்கரம் விளங்குகிறது.
தேசியச் சின்னத்தின் முத்திரையை மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரபூர்வமான முத்திரையாக இச்சின்னம் உள்ளது. தேசியச் சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல வண்ணத்திலும், அதிகாரிகள் பயன்படுத்தும் தாள்களில் சிவப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும். மக்களவை உறுப்பினர்கள் பச்சை நிறத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு நிறத்திலும் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும்.தேசியச் சின்னத்திற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். இதை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சின்னத்தை பாதுகாகபடவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் ஒரு மரத்தடியில் சிதலமடைந்து, இன்றளவும் கவனிக்கபடாமல் நான்கு சிங்கம் கொண்ட நமது தேசிய சின்னம் சிலை இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். திருச்சி மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பழமையான கட்டிடங்கள், வரலாற்று சின்னங்கள் என அனைத்தையும் புதுப்பிக்கும் அதிகாரிகள், தேசிய சின்னத்தை கவனிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வரும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், ஏன் இதை கவனிக்க மறுத்தார் என பொதுமக்கள் கேள்வி எழும்பியுள்ளனர். ஆகையால் நமது நாட்டின் தேசிய சின்னத்தை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை ஆகும். ஆகையால் உடனடியாக இந்த சின்னத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.