நகரும் விண்கற்களை கண்டிபிடித்த அரியலூர் ஆசிரியர்கள்.. பாராட்டிய நாசா!
விண்வெளியில் நகரும் விண்கற்களை கண்டுபிடித்ததற்காக அரியலூரை சேர்ந்த ஆசிரியர்களை பாராட்டி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சான்றிதழ் வழங்கியுள்ளது
விண்வெளியில் நகரும் விண்கற்களை கண்டுபிடித்ததற்காக அரியலூரைச் சேர்ந்த ஆசிரியர்களை பாராட்டி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சான்றிதழ் வழங்கியுள்ளது. பேரிழப்பை உண்டாக்கும் விண்கற்கள் விண்வெளியில் சுற்றுகின்றன. பல முக்கிய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகளால் இந்த அத்தனை விண்கற்களையும் கண்டுபிடிப்பது என்பது இயலாத ஒன்று. அந்த வகையில் இந்த விண்கற்களின் வகைகளை கண்டுபிடிப்பதற்காக பெங்களூருவில் உள்ள சிக்குரு கோ-லேபில் பலருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு விண்கற்களின் வகைகளை கண்டுபிடிப்பதற்காக பெங்களூருவில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஈடுபடும் அறிவியல் ஆர்வலர்கள் இந்த விண்கற்களை இனம்கண்டு அதனை ஆய்வு அறிக்கையாக தயார் செய்து சிக்குரு கோ-லேபிற்கு அனுப்புவார்கள்.இந்த பயிற்சியில் அரியலூர் மாவட்டம் சேனாதிபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியை கிரிஜா, மற்றும் இடையன்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியை கவிதா ஆகிய இருவரும் கடந்த ஜூலை மாதம் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஹய்தி தீவில் உள்ள `ஆப்பிள் டெலஸ்கோப்' மூலம், பூமியை நோக்கி வரும் விண் கற்களை இரவு நேரங்களில் எடுக்கப்பட்ட படங்களைப் பெற்று, ஆய்விற்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட சாஃப்ட்வேர் மூலம் அறிவியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு அனுப்பி வருகிறது. இதனைப் பெறும் ஆர்வலர்கள், நகரும் வகையில் உள்ள புகைப்படங்களை ஆய்வு செய்து அதன் மூலம் விண்கற்களைக் கண்டுபிடித்து அதன் ஆய்வறிக்கையை சிக்குரு கோ-லேப் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழிமுறைப்படி பயிற்சி பெற்ற இந்த ஆசிரியர்கள், ஆப்பிள் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து 40 விதமான நகரும் பொருள்களைக் கண்டுபிடித்து ஆய்வை சமர்ப்பித்துள்ளனர். ஆசிரியர்களின் ஆய்வறிக்கை நாசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு அறிக்கையில் 18 விண்கற்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ள கவிதா மற்றும் கிரிஜாவிற்கு 'மக்கள் அறிவியலாளர்' என்ற சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இது தனக்கு கிடைத்துள்ள பெரிய அங்கீகாரம் என்றும், விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தங்களைப் பாராட்டி சான்றிதழ் கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆசிரியை கவிதா தெரிவித்தார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டதாகவும், விண்கற்களால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணக்கிடுவதற்காக இந்த பயிற்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், கோடிக்கணக்கான விண்கற்கள் பூமியை சுற்றி உள்ளன. இவை பூமியை தாக்கினால் பேரிழப்பு ஏற்படும் என்று கவிதா தெரிவித்தார்.
தங்களைப் போன்றே ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும், அந்தப் பயிற்சியில் அவர்கள் கொடுக்கும் புகைப்படம் மற்றும் அதன் கிராஃப் உள்ளிட்டவற்றை சரியான முறையில் ஆய்வு செய்து அவற்றில் 40 விதமான நகரும் பொருட்களை கண்டுபிடித்து அந்த ஆய்வை நாசாவுக்கு சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். அதில் முதல் கட்டமாக 18 விண்கற்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அவை விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டால் இந்த விண் கற்களுக்கு தாங்களே பெயர் வைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.எனவே இது தனக்கு கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரம் என்பதால் தங்களைப் போன்றே சில ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் ஆர்வம் கொண்டவர்களை இந்த குழுவில் இணைத்து அவர்களையும் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது தன்னுடைய விருப்பமாக உள்ளதாக கவிதாதெரிவித்துள்ளார்.