கனமழையால் திருச்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது...!
இதுவரை சூழ்ந்துள்ள நீரில் சிக்கிய 100 பேரை மீட்டுள்ளனர்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோரையாற்றின் இரு கரையும் தொட்டு வெள்ளநீர் சீறிப் பாய்ந்து செல்கிறது. இதனால் திருச்சி மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் புகுந்து உள்ளது. குறிப்பாக கருமண்டபம் பொன் நகர் இனியானூர் வர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதேபோன்று உறையூர்- குழுமணி சாலையிலுள்ள செல்வநகர், அரவிந்த் நகர்,சீதா லட்சுமி நகர், போன்ற பகுதிகளில் விடிய விய கொட்டி தீர்த்த கன மழையால் 500க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை நிலவி வருவதாகவும், தொடர்ந்து பெய்யும் மழையினால் நீரின் அளவு அதிகரித்து வருவதால் மிகுந்த அச்சமான சூழ்நிலையிலும் வசித்து வருகிறோம் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் தேங்கி இருக்கும் மழை நீரில் சில விஷ ஊர்னிகள் அதிகளவில் இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் ஒரு அச்சமான சூழ்நிலையில் இருந்து வருகிறோம் என்றனர்.
மேலும் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தேங்கி இருக்கும் தண்ணீரில் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை வீரர்கள் இணைந்து படகின் மூலம் மக்களை மீட்டு வருகிறார்கள். மேலும் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் படகின் மூலமாகவே கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சூழ்ந்துள்ள நீரில் சிக்கிய 100 பேரை மீட்டுள்ளனர். மேலும் திருச்சி தீயணைப்பு நிலைய மேலாளருக்கு மெல்யுகிராஜா தலைமையில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த பகுதிகளில் தாழ்வான இடங்களிலுள்ள குடியிருப்புகளை தொடர்ந்து மழை நீரானது சூழ்ந்து கொண்டே இருக்கிறது. நீரின் மட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, ஆகையால் மக்களுக்கு ஒரு பாதுக்காப்பான சூழ்நிலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.