(Source: ECI/ABP News/ABP Majha)
திருச்சி மாவட்டத்தில் ரூ.76.05 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல்
திருச்சி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் ரூபாய் 76.05 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் முன்னிற்று செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் திருச்சி மாவட்டம் பூவாளுர் பேரூராட்சியில் மூலதன மானிய நிதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புள்ளம்பாடி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.25 கோடி மதிப்பீட்டில் அலப்பரெட்டியார் பாதை முதல் திருமழபாடி ரோடு வரை இருபுறமும் மூடியுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புள்ளம்பாடி பேரூராட்சியில் 15ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பொது சுகாதார நகர்நல மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தும், ச.கண்ணனூர் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 12.87 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிக்காக அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 20.43 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சிக்குட்பட்ட குடிநீர் மேம்பாட்டு பணிக்காக அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தும், மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் நமக்கு நாமே திட்டம் மற்றும் பேரூராட்சி நிதியின் கீழ் ரூபாய் 43 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தொட்டியம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 17.44 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிக்காக அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தும், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 17.58 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிக்காக அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தும், கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 3.35 கோடி மதிப்பீட்டில் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள புதிய வாரச்சந்தை கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜன், உதவி இயக்குனர், (பேரூராட்சிகள்) காளியப்பன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் செயல் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.