
Lok Sabha Election 2024: "கச்சத்தீவை மீட்பது சாத்தியமே.. டக்ளஸ் தேவானந்தா தமிழ் இனத்தின் எதிரி" வைகோ பேச்சு
Lok Sabha Election 2024 : கச்சத்தீவை மீட்பது சாத்தியமே என்றும், டக்ளஸ் தேவானந்தா தமிழ் இனத்தின் முதல் எதிரி என்றும் வைகோ பேசியுள்ளார்.

Lok Sabha Election 2024 : ம.தி.மு.க வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு சந்தித்த வைகோ பேசியது, சுயாட்சியும், கூட்டாட்சியும் மதச்சார்பின்மை, சமூக நீதி, தமிழ் ஆட்சி மொழி, கல்வி, நதிநீர் உரிமைகள், சிறுபான்மையினர் நலன், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலன் தூக்கு தண்டனை ஒழிப்பு , உள்ளிட்ட 74 தலைப்புகள் கீழ் இந்த தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்பட்டது.
கச்சத்தீவை பாதுகாக்க திமுக தீர்மானம்:
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தையே நானும் வழிமொழிகிறேன். இலங்கை அரசு ஒரு இனத்தையே அழித்த அகம்பாவத்திலும் ஆணவத்திலும் பேசுகிறார்கள். அவர்கள் ஒரு சுண்டைக்காய் நாடு. தமிழர்கள் மூச்சு விட்டாலே பறந்து போகக்கூடிய ஒரு நாடு கச்சத்தீவை தரமாட்டோம் என கூறுகிறார்கள். நெருக்கடி நிலைக்காலத்தில் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்க மத்திய அரசு உறுதியாக இருந்தது.
அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்கிற நிலைக்கு திமுக வந்தது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கக் கூடாது என சட்டமன்றத்தில் கலைஞர் தீர்மானம் கொண்டு வந்தார். நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தினார். ஆனால் நெருக்கடி நிலைக்காலத்தில் அதை மத்திய அரசு பொருட்படுத்தாமல் தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள். ஆரம்பகாலத்திலிருந்தே கச்சத்தீவு நமக்கு தான் சொந்தம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்.
கச்சத்தீவு சட்டபூர்வமாக மீட்க வேண்டும்
கச்சத்தீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியம் தான். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் வைத்து மசோதா நிறைவேற்ற வேண்டும், கச்சத்தீவு தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அது தொடர்பாக நீதிமன்றமே முடிவு எடுக்கலாம். டக்ளஸ் தேவானந்தா இலங்கையில் தமிழ் இனத்தின் முதல் எதிரி அவர்தான்.
ம.தி.மு.க.விற்கு தனி சின்னம் ஏன்?
மதிமுக தன்னிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு. மதிமுகவின் தனித்தன்மையை பாதுகாத்து கொள்ளும் விதத்தில் தனி சின்னத்தில் போட்டி என முதலமைச்சரிடமும் தெரிவித்து விட்டு தான் அறிவித்தோம். மதிமுக சின்னமான பம்பரம் சின்னம் பெற முயற்சித்தோம் தேர்தல் ஆணையம் செய்த தவறால் பம்பரம் சின்னத்தை இழக்க நேரிட்டது. இந்த நிலையில் கட்சியின் தனித் தன்மையை பாதுகாக்க பொதுச்சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

