(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election 2024: ராமநாதபுரம் தொகுதியில் கே.நவாஸ்கனி போட்டி- ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீன்
Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நவாஸ் கனி, ஏணி சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தலைமையேற்று நடத்தினார். மேலும், பொதுக்குழுவில் பல்வேறு கருத்துகளைக் கொண்டு விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எவ்வாறு செயல்பட வேண்டும், மக்களை அணுகும் போது எந்த திட்டங்களை முன்னிறுத்த வேண்டும், என்று நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேசியது..
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகளாக இருந்து இறந்தவர்களுக்கு இறங்கல் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதனை தொடர்ந்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கிய திமுக தலைமைக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் மற்றும் தேர்தல் குழுக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இந்திய நாட்டில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, வேற்றுமையில் ஒற்றுமையை என்பதை குலைத்து மதத்தின் பெயரால் மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேடும் ,பாஜக அரசிற்கு இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவித்தனர். மேலும் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறிப்பாக பன்முகத் தன்மை நிலைத்திட, பாகுபாடு இன்றி அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட,சிறுபான்மை மக்கள் வாக்குகள் சிதறாமல், சிந்தாமல் பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை செய்திட அனைவரும் முழுமையாக உழைத்திடுவோம்.
குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பரப்புரை பணிகளை மேற்கொள்வார்கள்.
ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக கே.நவாஸ்கனி மீண்டும் தேர்வு:
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கு, ஒதுக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக ஏற்கனவே அந்த தொகுதியில் மிகவும் சிறந்த முறையில் பணியாற்றி அனைத்து சமுதாய மக்களின் பாராட்டுகளையும், அன்பையும், ஆதரவையும், பெற்றிருக்கும் கே. நவாஸ் கனி அவர்களையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக மீண்டும் நிறுத்துவது என இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும், இராமநாதபுரம் தொகுதியில் நமது வேட்பாளர் நவாஸ் கனியின் வெற்றிக்கு துணை நிற்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 52 மாவட்டங்களில் இருந்தும் தேர்தல் நிதி வழங்க வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்வதோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அனைத்து அமைப்புகளின் ஆற்றல்மிகு செயல்வீரர்கள் இராமநாதபுரம் தொகுதியில் களப்பணி ஆற்றிட முன்வர வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும், அதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் முழுமையாக துணை நின்று தேர்தல் பரப்புரை பணிகளை செய்திடுவோம் என தெரிவித்தார்.