Lok Sabha Election 2024 : இந்தியாவிலேயே திருச்சி தொகுதியை முதன்மையானதாக மாற்றுவேன் - சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன்
Lok Sabha Election 2024 : திருச்சி நாடாளுமன்ற தொகுதியை மேம்படுத்தவும் அடிப்படை வசதிகளை உருவாக்கி சுகாதாரமான தொகுதியாக மாற்றுவேன் - சுயேட்சை வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி
Lok Sabha Election 2024 : தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் தலைவரும், சமூக சேவகருமான பத்மஶ்ரீ தாமோதரன் சுயேட்சை வேட்பாளராக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் கேஸ் ஸ்டவ் சின்னம் ஒதுக்கியுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி குமரன் நகரில் தேர்தல் அலுவலகம் திறந்து வேட்பாளர் தாமோதரன் தொகுதி முழுவதும் முக்கிய நிர்வாகிகள், பொது மக்களை சந்தித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சுயேட்சை வேட்பாளர் பத்மஸ்ரீ தாமோதரன் வாக்குறுதி
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனது சின்னம் கேஸ் அடுப்பு. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளும் திருச்சி மாவட்டத்தில் சில பகுதிகளும் அடக்கம். இந்த அனைத்து பகுதிகளிலும் நான் சமூக சேவை செய்துள்ளேன். குறிப்பாக அனைத்து மக்களுக்கும் குடிநீர் மேம்பாட்டு வசதிக்காகவும், கழிப்பறை வசதிக்காகவும், பொது கழிப்பிடங்களை மேம்பாடு செய்வதற்காகவும், பொது கழிப்பிடங்களை மக்களே பராமரிப்பதற்காகவும் மற்றும் திருச்சி மாநகராட்சியின் தூய்மைக்காவும் நான் வேலை செய்துள்ளேன். திருச்சி மாவட்டத்தின் துப்புரவு பணியாளர்களோடு இணைந்து இந்த மாநகராட்சி தூய்மை மாநகராட்சியாக மாறுவதற்கு கடந்த 25 ஆண்டு காலம் உழைத்திருக்கின்றேன். அது மட்டுமல்லாமல் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்கள், நகர்புறங்கள் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சுகாதார கழிப்பிட வசதி கட்டி கொடுத்துள்ளேன். இன்றைய தினம் ஒவ்வொரு பகுதியும் தூய்மையான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40 வருடம் சமூக சேவையில் ஈடுபட்டுள்ளேன். உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ விருது இந்திய அரசின் மூலமாக எனக்கு கிடைத்துள்ளது. எனது பொது சேவைக்காக கிடைத்த அங்கீகாரம் இந்த விருதாகும். பாராளுமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நான் பாராளுமன்றத்திற்கு சென்றால், நமது மக்களின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் முன்வைத்து இந்த தொகுதியின் மேம்பாட்டிற்காக வேலை செய்ய முடியும் என்ற எண்ணத்தில் தான் இந்த தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன்.
விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்பேன்
எனது பலம் என்னவென்றால் மக்கள் பலம். 40 வருட காலம் பொது சேவையில் ஈடுபட்டுள்ளேன். நேர்மையாகவும், மக்களுக்கு உண்மையாகவும் இருந்துள்ளேன். இதனால் மக்கள் இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொகுதியில் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நான் நன்கு அறிவேன். திருச்சி புதுக்கோட்டை பகுதியில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் நான் சென்று பார்வையிட்டு இருக்கிறேன். அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, விவசாயிகளின் தேவை, தொழில் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து எனக்கு நன்றாக தெரியும். குறிப்பாக விவசாய மேம்பாடு அவசியம் தேவை. இயற்கை வள மேலாண்மைக்காக நான் பாடுபடுவேன். ஒவ்வொரு பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சுகாதார மேம்பாட்டிற்கும், சமூக மேம்பாட்டிற்கும் நான் உழைப்பேன் என்று உறுதி அளிக்கின்றேன்.