கரூர் ஆட்சியரை தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி பாராட்டியது எதற்காக தெரியுமா?
’’மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் ஒருவர் கருணை கொலை செய்ய வேண்டி மனு அளிக்க வந்த நிலையில் தனது சொந்த நிதி மூலம் வீடு வசதி வாரிய குடியிருப்பின் வீட்டை வழங்க ஆட்சியர் ஏற்பாடு செய்து இருந்தார்’’
கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்துவரும் பிரபு சங்கர், மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டு அவர்களின் கோரிக்கைகளை விரிவாக கேட்டறியும் மாவட்ட ஆட்சித்தலைவர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மக்களின் கோரிக்கைகள் குறித்து அதிகபட்சமாக ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ள மனுக்கள் மீது எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க இயலுமோ அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 409 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் மக்கள் சபை முகாம் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆகியவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு காலதாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு மீதும், விதவை சான்று மற்றும் பிற சான்றுகள் கேட்டு வரபெற்ற மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மாற்றுத்திறனாளி மகனுடன் தாய் ஒருவர் கருணை கொலை செய்ய வேண்டி மனு அளிக்க வந்த நிலையில் உடனடியாக அவரிடம் தனது குறையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தனது சொந்த நிதியிலிருந்து காந்திகிராமம், ஆயுதப்படை மைதானம் எதிரே அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏ1 உள்ள 13 ஆம் நம்பர் கொண்ட வீட்டை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்வைப் பாராட்டி தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பி சிறப்பித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்களின் மக்கள் பணியை பாராட்டி தலைமைச்செயலாளர் கைப்பட எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் சமூக அருகே மிகுந்த வரவேற்பையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டையும் அளித்து வருகின்றனர். பல்வேறு மக்கள் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கையை வாரம்தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கி வருவதுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் செல்லும் இடத்திற்கு அங்குள்ள பொதுமக்களும் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி வழங்கி வருகின்றனர்.