கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி; திருச்சியில் சாராயம் விற்ற நபர் கைது - போலீஸ் அதிரடி
திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வழிப்பறி, திருட்டு, கொலை மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் குற்றச்சம்பவங்கள் நடக்காத வண்ணம் அனைத்து பகுதிகளிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப் படைகள் அமைத்து தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கள்ளச்சாராயம் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றி உடனடியாக பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம், போதை பொருட்களை தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் எவராக இருந்தாலும் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், காவல் ஆய்வாளர்களுக்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் சாராய ஊரல் பறிமுதல்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெட்டவேலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாராயம் ஊரல் போட்டதாக மாவட்ட காவல் உதவி எண் (Help Line) 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி கிராமங்களை தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது நெட்டவேலம்பட்டி நடுத்தெருவில் வசித்து வரும் பொதியன் மகன் முத்துசாமி வயது.50/24 என்பவரது தோட்டத்தில் முசிறி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது சட்டவிரோதமாக இருந்த 250 லிட்டர் சாராயம் ஊரல் மற்றும் 06 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் Cr.No.394/24, u/s 4 (1)(aaa) 4(1)(g) r/w 4(1)(A) TNP Act- ன்படி வழக்கு பதிவு செய்யபட்டது.
திருச்சியில் சாராய ஊரல் செய்த நபர் அதிரடியாக கைது
இதனை தொடர்ந்து முத்துசாமி என்பவரை துறையூர் குற்றவியல் நடுவர் அவர்களிடம் ஆஜர்படுத்தி, வரும் 03.07.2024-ஆம் தேதி வரை காவல் அடைப்பு பெறப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளார்.
மேலும் மேற்படி இரகசிய தகவலினை கொடுத்த நபரின் ரகசியம் காக்கப்பட்டு, அவருக்கும் மற்றும் தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது.
இதுபோன்ற, குற்ற நிகழ்வுகள் பற்றிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் 9487464651 (Help Line) எண்ணிற்கு தெரிவிக்கவும். தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் இரகசியம் காக்கப்படும். மேலும், நல்ல தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் கள்ளச்சாராய ஊரலில் போன்ற குற்ற சம்பவங்களை ஈடுபடுபவர்களை கண்டறிந்து உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.