திருச்சி: புதிய வாக்காளர்களுக்கு நவீன வாக்காளர் அட்டை தபால் மூலம் அனுப்பும் பணி தீவிரம்
திருச்சி மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு இந்த நவீன வாக்காளர் அட்டை தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் 1.1.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டார். அதன்படி தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 10 ஆயிரத்து 413 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 11 லட்சத்து 20 ஆயிரத்து 158 பேரும், பெண்கள் 11 லட்சத்து 89 ஆயிரத்து 933 பேரும் உள்ளனர். மேலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,544 ஆகும். அதிகமான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் 3 லட்சத்து ஆயிரத்து 659, குறைவான வாக்காளர் கொண்ட தொகுதியாக லால்குடி 2 லட்சத்து 18 ஆயிரத்து 971 உள்ளது. புதிய வாக்காளர்களாக 43 ஆயிரத்து 423 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு தற்போது நவீன வாக்காளர் அட்டை அச்சிடும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அவர்களுக்கு தபால் மூலம் புதிய வாக்காளர் அட்டை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இதுகுறித்து திருச்சி மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் கூறியது.. பழைய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த அட்டையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடையாள அட்டையின் முன்புறம் வாக்காளரின் புகைப்படத்துடன், அட்டையின் வலது ஓரத்தின் மேற்பகுதியில் அவரது படம் 'நெகட்டிவ் இமேஜ்' போன்றும் இடம்பெற்றுள்ளது. முன்பு வாக்காளர் அடையாள அட்டையில், 'ஹாலோகிராம் ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு இருக்கும். தற்போது, அட்டையிலே 'ஹாலோகிராம்' அச்சிடப்படுகிறது. அட்டையின் பின்பகுதியில் 'கியூ.ஆர்.கோடு' வசதியுடன், சிறிய எழுத்துக்களில் முகவரி இடம் பெற்றுள்ளது. அத்துடன் எந்த சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரால் வழங்கப்பட்டது, வழங்கப்பட்ட நாள் போன்றவை அச்சிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பு என்று, ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், நடப்பில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். இந்த அட்டையை வயதிற்கான சான்றாக தேர்தல் நடைமுறைகளை தவிர பிற நேர்வுகளில் பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன. அனைத்து அட்டைகளும், ஒரே வடிவமைப்பில் உள்ளன. இந்த வாக்காளர் அட்டையை போலியாக உருவாக்க இயலாது. திருச்சி மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு இந்த நவீன வாக்காளர் அட்டை தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.