திருச்சி மாநகராட்சியில் 65 பேர்கள் மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்றனர்.
திருச்சி மாநகராட்சி உள்ள 65 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேரு, அன்பில் மகேஷ், தினகரன், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர்களின் பெயர்களை கூறி பதவி பிரமாணம் மேற்கொண்ட கவுன்சிலர்கள்.
தமிழகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றது. அன்றே வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று திருச்சி கண்டோன்மெண்ட் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகளின் படி வார்டு வாரியாக வெற்றிபெற்ற வேட்பாளர் மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர். திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் உறுதிமொழி படிவத்தில் வாசித்தார் அவரைத் தொடர்ந்து வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உறுதிமொழி படிவத்தை வாசித்து கையெழுத்திட்டு மாமன்ற உறுப்பினராக தங்களது பதவியை ஏற்றுக்கொண்டனர். இதில் திமுக 22வது வார்டு வேட்பாளர் விஜயலட்சுமி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் தளபதி ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் ஆதரவோடு எனது பணியை நேர்மையாக செய்வேன் என உறுதிமொழி ஏற்றார்.
தொடர்ந்து திருச்சி மாநகராட்சி 27 வது வார்டு திருச்சி மேயர் வேட்பாளர் மு அன்பழகன் உறுதிமொழி படிவத்தை வாசித்த பிறகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் , முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு அவர்களின் ஆசியுடன் எனது பணியை நேர்மையாக செய்வேன் என்று உறுதிமொழி ஏற்றார். திருச்சி மாநகராட்சி 47 வது வார்டு அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் உறுதிமொழி படிவத்தை வாசித்தபிறகு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ,மக்கள் செல்வர் டிடிவி அவர்களின் ஆசீர்வாதத்துடன் எனது கடமையை சிறப்பாக செய்வேன் என தெரிவித்தார். திருச்சி மாநகராட்சி 49 வது வார்டு திமுக வேட்பாளர் லீலா, உறுதிமொழி படிவத்தில் வாசித்த பிறகு தான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பாகவும் தம்பி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என் சார்பாகவும் எனது கடமையை சிறப்பாக செய்வேன் என உறுதி அளிக்கிறேன் என கூறி மாமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
திருச்சி மாநகராட்சி 65 வது வார்டு அதிமுக உறுப்பினர் அம்பிகாபதி உறுதிமொழி படிவதை வாசித்த பிறகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசி பெற்ற புரட்சித்தலைவி நல்லாசி பெற்ற அண்ணன் ஓபிஎஸ் ஆதரவுடன் அண்ணன் இப்பிஎஸ் ஆதரவுடன் திருச்சி மாவட்ட செயலாளர் அண்ணன் வெல்லமண்டி நடராஜன் ஆதரவுடன் எனது கடமையை சிறப்பாக செய்வேன் என உறுதி அளிக்கிறேன் என கூறி மாமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இவரைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் உறுதி மொழி படிவத்தை வாசித்து கையெழுத்திட்டு தங்களது பதிவை முறைப்படி ஏற்றுக்கொண்டனர். திருச்சி மாநகராட்சியில் வெற்றி பெற்று பதவி ஏற்றவர்களை அந்த அந்த வார்டு மக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இனிக்கோ இருதயராஜ், பழனியாண்டி ஆகியோர் கலந்துக்கொண்டு மாமன்ற உறுப்பினர்களை வாழ்த்தினர்.