Trichy: அம்மன் கழுத்தில் இருந்த 15 பவுன் தாலி சங்கிலியை திருடிய கணவன் - மனைவி! திருச்சியில் பரபரப்பு
திருச்சி அருகே மதுரை காளியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த 15 பவுன் தாலி சங்கிலி திருடிய கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தொட்டியம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். அம்மனுக்கு தினசரி அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு 15 பவுன் மதிப்பில் தாலி சங்கிலி மாங்கல்யம் கருகமணி தாலி குண்டு தாலிக்காசு உள்ளிட்ட பொருட்கள் அணிவிக்கப்பட்டு இருக்கும்.
அம்மன் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலி திருட்டு:
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி ஒரு கைக்குழந்தையுடன் வந்த கணவன் மனைவி அம்மன் சன்னதியில் அமர்ந்து சுவாமி கும்பிட்டுள்ளனர். கோயில் பூசாரி மருதை அம்மனுக்கு பொங்கல் வைப்பதற்காக மடப்பள்ளிக்கு சென்று இருந்த சமயத்தை சாதகமாக்கி கொண்டு, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தாலி சங்கலியை திருடிக் கொண்டு காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
வாலிபர் மனைவியுடன் வந்து தாலி சங்கலியை திருடிகொண்டு தப்பி செல்வது கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. அந்த பதிவுகளை வைத்து தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையிலான போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் குற்றவாளி பதுங்கி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்தையா போலீஸ் படையுடன் சென்று வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தார் .
கணவன் - மனைவி கைது:
பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் பகவதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த மதுரை வீரன் என்பவரது மகன் சிவசுப்பிரமணியன் என்பதும், இவரது மனைவி நித்யா 27 ஆகியோரும் சேர்ந்து கோயிலுக்கு சாமி கும்பிடுவது போல வந்து நடித்து நகையை திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சிவசுப்பிரமணியன் மதுர காளியம்மன் சுவாமியின் தாலி சங்கிலி ஆகியவற்றை உருக்கி கட்டி தங்கமாக மாற்றி வைத்திருந்தார்.
15 பவுன் மதிப்பிலான கட்டி தங்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்து கார் மற்றும் செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இது போன்று வேறு ஏதும் கோயில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா தம்பதிகள்? என புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை காளியம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிச் சென்ற நபர்களை விரைந்து கைது செய்த தொட்டியம் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.