அரசு தரும் பொங்கல் கரும்பு கொள்முதலில் குளறுபடி- கரும்பு விவசாயிகள் வேதனை
கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொள்முதல் செய்வதில் குளறுபடியும் முறைகேடும் நடைபெறுவதால், ஒரு கரும்புக்கு வெறும் 13 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது
தமிழ்நாட்டில் மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நோக்கில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு நியாய விலை கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழ்கத்தில் சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருள்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு 1,088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்தாண்டு லாபகரமான விலை கிடைக்கும் என நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் இருந்தார்கள். ஆனால் இதைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி திருச்சி மாவட்டம், நொச்சியம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் செங்கரும்புகள் என அழைப்படும் பொங்கல் கரும்புகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் நெருங்கும் நிலையில் விவாசயிகள் கரும்புகளை அறுவடை செய்து வருகின்றனர். அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவதற்கு மட்டும் 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொள்முதல் செய்வதில் குளறுபடியும் முறைகேடும் நடைபெறுவதால், ஒரு கரும்புக்கு வெறும் 13 ரூபாய் விலை மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிகின்றனர்.
இதுகுறித்து பேசும் விவசாயி மணிகண்டணிடம் பேசுகையில், கரும்பு கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் மட்டுமே விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலனோர் விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யவில்லை. இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் மிகவும் குறைந்த விலைக்கு பொங்கல் கரும்புகளைக் கேட்கிறார்கள். ஒரு கரும்புக்கு அதிகபட்சம் 13 ரூபாய்தான் விலை தருகிறார்கள். இதனால் ஒரு கரும்புக்கு 20 ரூபாய் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்யும் பொங்கல் கரும்புக்கு மிகவும் குறைவான விலை கிடைக்கக் கூடிய நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. ஆகையால் விவசாயிகளின் நலனை கருதி தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.