காதலியின் கணவனை கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சியில் காதலியின் கணவனை கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெகன்ஸ்பாபு (வயது 25). இவருக்கும், அதேமாவட்டத்தை சேர்ந்த அஜிதா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. அஜிதா சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் தன்னுடன் அதே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த ஜான்பிரின்ஸ்(31) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே அஜிதாவுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிட்டதால் திருமணத்துக்கு பிறகும் அஜிதா தனது காதலன் ஜான்பிரின்ஸுடன் செல்போனில் பேசி பழகி வந்தார். இந்தநிலையில் தங்களது கள்ளக்காதலுக்கு கணவர் ஜெகன்ஸ்பாபு இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்ய அஜிதாவும், ஜான்பிரின்ஸும் சதிதிட்டம் தீட்டினர். இவர்களுடைய சதிதிட்டத்தை திருச்சியில் அரங்கேற்றவும் முடிவு செய்தனர். இதையடுத்து திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜெகன்ஸ்பாபுவை கன்னியாகுமரியில் இருந்து அஜிதா சென்னைக்கு ரெயிலில் அழைத்து சென்றார். சென்னை செல்லும் வழியில் திருச்சியில் இறங்கி தன்னுடன் பணியாற்றி வரும் டாக்டர் ஒருவரை சந்தித்து விட்டு செல்லலாம் என்று கணவர் ஜெகன்ஸ்பாபுவிடம் அஜிதா கூறினார். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால் முன்னதாகவே ஜான்பிரின்ஸுக்கு போன் மூலம் இது பற்றி தெரிவித்த அஜிதா திருச்சி ரெயில் நிலையம் அருகே காத்திருக்கும்படி கூறி உள்ளார். இதனை தொடர்ந்து அஜிதாவும், ஜெகன்ஸ்பாவும் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே வந்ததும், கல்லுக்குழி முடுக்குப்பட்டி அருகே நள்ளிரவில் ரெயிலில் இருந்து கீழே இறங்கினர்.
மேலும் அங்கு நின்று கொண்டு இருந்த ஜான்பிரின்ஸை காண்பித்து டாக்டர் என்று கணவர் ஜெகன்ஸ்பாபுவுக்கு அஜிதா அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் 3 பேரும் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஜான்பிரின்ஸ் துண்டால் ஜெகன்ஸ்பாபுவின் கழுத்தை இறக்கி கொலை செய்தார். பின்னர் தண்டவாளத்தில் அவரது உடலை போட்டுவிட்டு இருவரும் மறைந்து நின்று பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். மறுநாள் ஜெகன்ஸ்பாபுவின் உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஜெகன்ஸ்பாபுவின் உடலை பார்த்த பெற்றோர் தனது மகன் கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகைகள் மாயமாகி இருப்பதால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து ஜெகன்ஸ்பாபு செல்போனில் யார், யாரிடம் பேசி உள்ளார். அவருடைய மனைவி அஜிதா யாருடன் பேசி உள்ளார் என செல்போன் எண்களை வைத்து விசாரித்தனர். இதில் ஜான்பிரின்ஸுடன் அஜிதா தினமும் பலமணிநேரம் பேசி வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்றும் அவருடன் பலமுறை செல்போனில் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் சென்னையில் இருந்த ஜான்பிரின்ஸை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தங்கி இருந்த அறையில் பீரோவில் கொலை செய்யப்பட்ட ஜெகன்ஸ்பாபுவின் நகைகளை மறைத்து வைத்து இருந்தார்.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அஜிதாவுடன் சேர்ந்து ஜெகன்ஸ்பாபுவை கொலை செய்ததை ஜான்பிரின்ஸ் ஒத்து கொண்டார். திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை ரெயில்வே போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து ஜான்பிரின்ஸையும், அஜிதாவையும் கைது செய்தனர். இதையடுத்து வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அஜிதா கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ஜெகன்ஸ்பாபுவை கொலை செய்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணை முடிந்தது. அரசு வக்கீல் சவரிமுத்து ஆஜராகி வாதாடினார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி கே.பாபு நேற்று கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ஜான்பிரின்ஸுக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.