டெங்கு காய்ச்சல் அபாயம்.. திருச்சி மருத்துவமனையில் தனி வார்டுகள் தயார்.. தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை..!
திருச்சி அரசு மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் 50 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோயான டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தான்.
டெங்கு காய்ச்சல்:
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு கொசுக்களை ஒழிக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சல் "ஏடிஸ்" என்ற ஒரு வகையான கொசு மூலம் பரவுகிறது. எனவே வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் பல இடங்களில் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு பாதித்தவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிறப்பு வார்டு:
இதனால் அனைத்து அரசு ஆஸ்பத்திரியிலும் சிறப்பு வார்டுகளை தயார் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கை வசதிகளுடன் டெங்கு சிறப்பு வார்டு தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டில் முன்னேற்பாடு பணிகளை அரசு ஆஸ்பத்திரி டீன் நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது, திருச்சி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் மற்றும் டாக்டர்கள் குழுவினர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு பேசியது, "திருச்சியில் திருச்சியில் நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் காய்ச்சலால் பாதிக்கபட்டு மருத்துவமனை வருகிறார்கள். ஆனால், இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 படுக்கைகள் தீவிர சிகிச்சைக்கும், தலா 20 படுக்கைகள் குழந்தைகள், பெரியவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ்:
படுக்கையில் கொசுவலைகள் கட்டப்பட்டு உள்ளன. அத்துடன் தேவையான அளவு ரத்த அணுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள டாக்டரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். எனவே நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான மருந்துகளும், டெங்கு காய்ச்சலை சரி செய்வதற்கான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளும் தயார் நிலையில் உள்ளது.
நிபா வைரஸ் தற்போது கேரளாவில் பரவுவதாக கூறப்பட்டாலும், தமிழகத்தில் குறிப்பாக திருச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இருப்பினும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், நாம் இருக்கும் இடங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் போதும். அதேசமயம் காய்ச்சல் ஏற்பட்டால் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் உடனடியாக மருத்துவர்களை நேரில் அனுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.