திருச்சி மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதல் - 11 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சி மத்திய சிறையில் கைதிகள் திடீர் மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திருச்சி மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள், விசாரணை கைதிகள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் அறை எண் 5-ல் திருச்சி சர்க்கார் பாளையம் பனையக்குறிச்சியை சேர்ந்த ஜெகன் (வயது 27) என்ற கைதி அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது 23 வழக்குகள் உள்ளன. சம்பவத்தன்று மாலையில் இவர், தான் தங்கியிருந்த அறையில் உள்ள கைதிகளை தகாத வார்த்தைகளால் திட்டி அவமரியாதை செய்ததாக தெரிகிறது. உடனே அவர்கள் இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இந்தநிலையில் மறுநாள் காலை ஜெகன் குளிப்பதற்காக தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்துக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த கைதி வினீத், கைதிகளை அவமரியாதை செய்தது குறித்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதுடன் கைகலப்பாக மாறியது. அத்துடன் இருவரும் பிளாஸ்டிக் வாளியை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் வினீத்துக்கு ஆதரவாக கைதிகள் பிரவீன்குமார், ராஜேஷ், ஹரிபாலாஜி, நரேஷ், பிரேம்குமார், ஆகாஷ், கண்ணன், சபரிவாசன், கார்த்திக் ஆகியோரும் சென்றதாக கூறப்படுகிறது.
இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மத்திய சிறை வளாகத்தில் அசாதாரண சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து சிறை அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்து அவரவர் அறையில் அடைத்தனர். மேலும் இந்த மோதல் சம்பவம் குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மோதலில் ஈடுபட்ட கைதிகள் ஜெகன், வினீத் உள்பட 11 கைதிகள் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் மத்திய சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கடந்த ஜீன் மாதம் 4 ஆம் தேதி , திருச்சி மத்திய சிறையில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி காளிமுத்து என்ற வெள்ளை காளி, சிறை வார்டன் முத்துக்குமாரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக ஒரு பிரிவினர் ஒன்று சேர்ந்தனர். இதற்கிடையே வெள்ளைக்காளிக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினர் திரண்டனர். இதையடுத்து சிறைக்குள் கைதிகள் இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சிறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்குகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக சிறை அலுவலர் சண்முகசுந்தரம், கே.கே.நகர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் காளிமுத்து என்ற வெள்ளை காளி, நவீன் நாகராஜன், கார்த்தி என்ற அகோரி கார்த்திக், ரவி என்ற கிராண்ட் ரவி, குப்பை கண்ணன், ரபிக், தயா, வெள்ளை ராஜ், விக்கி பாபு, கவுரிஸ் ஆகிய 10 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வார்டன் முத்துக்குமாருக்கு ஆதரவாக வெள்ளைக் காளி கோஷ்டியினரை தாக்கியதாக ராஜ்குமார், பிரபு, சியான் பாண்டி, உதயகுமார், மகாராஜா, ஆகாஷ், வெள்ளைச்சாமி, ராஜா, முத்துமணி, தாமஸ், சச்சின், பறவை விஜய் , நரேஷ், ராஜேஷ் ஆகிய 14 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்