புதுக்கோட்டை : வீடியோவில் பதறித்துடித்த கர்ப்பிணி.. ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கும் பெற்றோர்.. நடந்தது என்ன?
கொடுமைப்படுத்தும் கணவன் ,மொழி தெரியாத மாநிலத்தில் தவிக்கும் பெண்.
புதுக்கோட்டை மாவட்டம், ஒலியமங்களம், கிராமத்தில் ராமன், வெள்ளையம்மாள் தம்பதியின் மகள் பவித்ரா. வயது 23. இவர்கள் பல ஆண்டுகளாக அக்கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அதேபோன்று முசுந்தரம் பட்டி பகுதியில் வசித்து வந்தவர்தான் முத்துச்செல்வன் என்பவர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் பவித்ராவுக்கும், முத்துச்செல்வனுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த உடனே தனக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை கிடைத்து விட்டதாகவும் நான் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். பின்பு பவித்ராவையும், ஒன்றை வயது குழந்தையையும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முத்துச்செல்வன் மகாராஷ்டிரா அழைத்துச் சென்றார் ,என பவித்ராவின் பெற்றோர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநிலம் சென்ற சில மாதங்கள் கழித்து தன் கணவர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும், மிகவும் துன்புறுத்துவதாகவும், பவித்ரா வீடியோ கால் மூலம் தனது பெற்றோருக்கு தெரிவித்தார்.
எனக்கு தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாததால் அருகிலுள்ளவர்களிடம் கூட என்னுடைய துன்பத்தை சொல்ல முடியவில்லை ஆகையால் என்னை உடனடியாக காப்பாற்றுங்கள் என தன் பெற்றோர்களிடம் பவித்ரா கதறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து பவித்ராவின் பெற்றோர்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர்.
தனது மகளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஒன்றரை வயது குழந்தையும் தற்போது 4 மாத கர்ப்பிணியான என்னுடைய மகள் பவித்ராவை அவருடைய கணவர் முத்துச்செல்வன் அடித்து மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும் ,என்னை காப்பாற்றுங்கள் என வீடியோ கால் மூலம் பேசிய ஆதாரங்களை வைத்து தன் மகளை மீட்டு தரவேண்டும் என்றும், முத்துச்செல்வன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பவித்ராவின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் வீடியோ கால் மூலமாக பவித்ரா பேசியதை காண்பித்தபோது அங்கிருந்த அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். 23 வயது உடைய அந்தப் பெண் ”மகாராஷ்டிரா மாநிலத்தில் அழைத்துச் சென்று குடும்பம் நடத்துவதாக கூறி தினந்தோறும் அடித்து துன்புறுத்துகிறார். எனது கணவர் மற்றும் அவருடைய தாய் ஆகிய அனைவருமே என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று கூறியுள்ளார்
என் குடும்பத்தை மிகவும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள், நீ யாரிடம் போய் சொன்னாலும் யாரை அழைத்து வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கணவர் என்னை மிரட்டுகிறார். எனக்கு நீதி கிடைக்க வேண்டும், என்னை காப்பாற்றுங்கள் இங்கு உள்ள காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றாலும் எனக்கு மொழி தெரியாத ஒரு காரணத்தினால் அவர்கள் புகாரை ஏற்க மறுக்கிறார்கள் என வேதனையுடன் தெரிவித்தார். என்னை காப்பாற்றுங்கள் என கதறி அழும் காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவித்ராவின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.