அரியலூர்: மயானத்திற்கு பாதையில்லை; இறந்தவரின் உடலை ஏரியில் தூக்கி செல்லும் அவலம்
கழுவந்தோண்டி கிராமத்தில் இறந்தவர்களின் உடலை ஏரியில் தூக்கி செல்லும் அவலம் நீடிக்கிறது. எனவே இப்பகுதியில் பாலம் மற்றும் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் நைனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவை கொண்டது. உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிகால் ஓடை மற்றும் காட்டு பகுதிகள் வழியாக சென்று இந்த ஏரியில் கலக்கிறது. பின்னர் இந்த ஏரி நிரம்பி வடிகால் மதகு வழியாக சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது. இந்த ஏரியின் கரையில் இடுகாடு அமைந்துள்ளது. இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் ஏரிக்கரை வழியாக தூக்கி சென்று இடுகாட்டில் புதைக்கப்படும். மழைக்காலங்களில் இறந்தவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம் தற்போதும் நீடிக்கிறது. எனவே இப்பகுதியில் பாலம் மற்றும் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் கழுவந்தோண்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரது மனைவி மின்னல்கொடி (வயது 65) உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இந்தநிலையில் அரியலூரில் பெய்த தொடர் மழையின் காரணமாக நைனார் ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் மின்னல் கொடியின் உடலை சுமந்து ஏரியை கடந்து இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது... கடந்த 2019-ம் ஆண்டு சிவலிங்கம் மனைவி ருக்குமணி, சாரங்கபாணி மனைவி கோசலம் ஆகியோர் வயது முதிர்வு காரணமாக இறந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு ராமலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். அவர்களது உடல்களை மார்பளவு தண்ணீரில் உறவினர்கள் தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர். கடந்த 2021-ம் ஆண்டு கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் மகன் கண்ணன் (50), ஜெயராமன் மகன் கண்ணன் (45) ஆகியோரின் உடல்களை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்போதைய மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இப்பகுதியில் பாலம் மற்றும் சாலை அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மார்பளவு மற்றும் இடுப்பளவு தண்ணீரில் மிதந்தவாறு இறந்தவர்களின் உடலை தூக்கி செல்லும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என்பது தெரியவில்லை என தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்