Crime: அரியலூரில் 3 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள்.. பெண்களிடம் 8½ சவரன் நகை திருட்டு - மக்கள் பெரும் அச்சம்
அரியலூர் மாவட்டம் , அடுத்தடுத்து ஒரே இரவில் பல பெண்களிடம் நடைபெற்ற துணிகர சங்கிலி பறிப்பு சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நந்தையன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா(வயது 51). இவர் அசாவீரன்குடிக்காடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில் இளைய மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அவரது மகள் மற்றொரு அறையில் தூங்கினார்.
வீடுபுகுந்து திருட்டு:
அப்போது நள்ளிரவு 1 மணிக்கு முகத்தில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வந்த 2 மர்மநபர்கள் கடப்பாரை மூலம் கதவை உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த ஆசிரியர் சித்ரா அதிர்ச்சி அடைந்து திருடர்களை உள்ளே வர விடாமல் கதவை பிடித்து தடுத்துள்ளார். அப்போது கொள்ளையர்கள் வேகமாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து சித்ராவை கடப்பாரையால் தலையில் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலால் அலறி துடித்து அவர் மயக்கம் அடைந்தார்.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அவர் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். சித்ராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சித்ராவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமைனயில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அடுத்தடுத்து கொள்ளை:
இந்த நிலையில் செந்துறை அருகே உள்ள ஆதிகுடிக்காடு கிராமத்தில் சுதா என்பவர் வீட்டிற்கு வந்த விருந்தினரான பெரம்பலூர் மாவட்டம், கீழ உசேன் நகரத்தை சேர்ந்த சுந்தரராஜன் மனைவி ரோஸி(23) என்பவர் நேற்று இரவு தனது கணவருடன் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அதிகாலையில் வீட்டிற்கு உள்ளே புகுந்த மர்மநபர்கள் 2 பேர் அவர் அணிந்து இருந்த 5½ பவுன் தாலிச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து உடனே தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
அதேபோல் அதே தெருவை சேர்ந்த அருண்குமார் மனைவி இந்துமதி(28) வீட்டிற்குள் புகுந்த அதே நபர்கள் இந்துமதி அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். மேலும் சுப்பையன் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அந்த வீட்டில் யாரும் இல்லாததால் வெரும் கையுடன் தப்பிச்சென்றனர். நஞ்சைகுடிகாட்டில் மேலும் 4 வீடுகளில் கைவரிசை காட்ட முயற்சி செய்துள்ளனர். அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடங்களுக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சம்பவ இடங்களுக்கு வந்த விரல்ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.