பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 நபர்கள் அதிரடியாக கைது - போலீசார் வேட்டை
திருச்சி மாநகரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 5 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமினி பொறுப்பேற்றில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை ஏதும் நடைபெற வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்தும், சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
திருச்சி மாநகரம் முழுவதும் பொருந்தப்பட்டுள்ள CCTV கேமராக்களை முறையாக பாரமரிக்க வேண்டும் எனவும், மேலும் பழுதான CCTV கேமராக்களை பழுதுபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 5 பேர் கைது
இந்நிலையில் திருச்சி பொன்மலை காவல்நிலைய ஆய்வாளர் திருவானந்தம் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் வினோத் தலைமையிலான போலீசார், பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்திலிருந்து பொன்மலை ஆர்மரிகேட் செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பொன்மலைப் பகுதியில் உள்ள பாழடைந்த ரெயில்வே குடியிருப்புக் கட்டிடத்தில் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அப்போது ஒரு சிறுவன் மட்டும் தப்பித்து நின்று விட்டான். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார் 5 பேரை சுற்றி வளைத்துப்பிடித்து விசாரித்ததில், அவர்கள் வழிப்பறி செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கம்பு என பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்த நபர்கள் விக்னேஷ்வரன், சரண்குமார், அரவிந்த், விஜய், ராம்பிரசாத் ஆகிய 5 பேர் மீதும் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் பற்றி அப்பகுதியில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக பொன்மலையில் உள்ள ரயில்வே பாழடைந்த குடியிருப்பு பகுதிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டுகளில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை - போலீஸ் கமிஷனர்
இதனை தொடர்ந்து திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் காவல்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை முழுமையாக தடுத்திட வேண்டும்.
குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சுற்றி தெரியும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கொலை, கொள்ளை, பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தல், போதை பொருள் விற்பனை போன்ற குற்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.