(Source: ECI/ABP News/ABP Majha)
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 37 பேர் மருத்துவமனைகளில் அனுமதி
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் யாரும் சிகிச்சை பெறவில்லை என்றாலும், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரையில் (14-ந்தேதி) 120 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக 15 முதல் 20 வரை பதிவாகி வருகிறது. பாதிப்பு அதிகரித்து வருவதால் வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல, டெங்கு தடுப்பு பணிகளை கிராமங்கள் தோறும் சென்று மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுக்க தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. அதே சமயம் புதுக்கோட்டை மாவட்டத்திலும் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 37 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 151 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவத்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் தினந்தோறும் 2 அல்லது 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் யாரும் சிகிச்சை பெறவில்லை என்றாலும், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக ஏற்கனவே உள்ள வார்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக போதிய அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்கு மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். டெங்கு பாதித்த முதல் நாள் பொதுவான அறிகுறிகளான சளி, காய்ச்சல், தலைவலி, உடல் வலி இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் அடுத்த இரண்டு நாள்களில் காய்ச்சல் கடுமையாகும். கண்களுக்குப் பின்னால் தாங்கமுடியாத வலி, எழமுடியாத அளவுக்கு உடம்புவலி இருக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல் மொத்தமாக முடக்கிப் போட்டுவிடும். முகமே கண்ணாடி போல டெங்கு பாதிப்பைக் காட்டிக் கொடுத்துவிடும். முகம் வீங்கியிருக்கும். உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுவது டெங்குவின் முக்கிய அறிகுறிகள் ஆகும். ஆகையால் எந்தவிதமான அறிகுறிகள் வந்தாலும் உடனடியாக மருத்துவர்களை அனுகவேண்டும், தாமதம் படுத்த கூடாது.