புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டி 23 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே ராஜகிரி-குளவாய்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 731 காளைகள் களம் இறங்கியது, மாடுகள் முட்டி 23 பேர் காயம் .
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ராஜகிரி-குளவாய்ப்பட்டியில் பிரசித்தி பெற்ற மதியசாமி, கூத்தாண்டம்மன், பிடாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கூத்தாண்டம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டு இருந்த ஜல்லிக்கட்டு திடலில் நேற்று அதிகாலை முதலே விராலிமலை, கீரனூர், இலுப்பூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 731 காளைகள் கொண்டு வரப்பட்டன. அதேபோல் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்திருந்த மாடுபிடி வீரர்களில் அங்கிருந்த மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்து 180 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் 25 நபர்கள் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணியளவில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் திடலில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை. அதன்பின்னர் காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.
இதில் பல காளைகள் பிடிபடாமல் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியபடி சீறிப்பாய்ந்து சென்றன. சில காளைகள் களத்தில் நின்று சுற்றி சுற்றி மாடுபிடி வீரர்களை விரட்டி சென்று முட்டியது. அப்போது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்கள், பொதுமக்கள் விசில் அடித்தும், கைதட்டியும் ஆரவாரம் செய்தனர். மேலும் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த காளையின் உரிமையாளர் இனாம்குளத்தூர் நம்புநாதன் (வயது 22), பார்வையாளர்கள் விராலிமலை சுரேஷ்குமார் (22), மலைக்குடிப்பட்டி பிரகாஷ் (18) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், தங்கம்- வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, குக்கர், மிக்சி, மின்விசிறி, டைனிங் டேபிள், எல்.இ.டி. டி.வி., பாத்திரம், ரொக்கப்பரிசு உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகிய சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி, விராலிமலை தாசில்தார் சதீஷ், விராலிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்தியசீலன், ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், ஊராட்சி துணைத்தலைவர் செந்தமிழ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விராலிமலை சுற்றுவட்டாரம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பார்வையாளர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 3.35 மணி வரை நடைபெற்றது. புதுக்கோட்டை கூடுதல் துணை சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணா மேற்பார்வையில் இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.