திருச்சியில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை 102% அதிகரிப்பு
திருச்சி நகரில் அதிவேகம், செல்போனில் பேச்சு, மற்றும் போதையில் வாகனம் ஓட்டியதாக 4.84 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
திருச்சி மாநகரில் பொருத்தவரை பல்வேறு இடங்களில் சாலை விபத்து அதிகரித்து வருவதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் சில இடங்களில் சிக்னல் சரியாக இயங்காமல் இருப்பதே விபத்திற்கு முக்கிய காரணம் என தெரிவித்தனர். சாலை விபத்துக்களை முற்றிலும் தடுக்கும் பொருட்டு நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும் என மக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மாநகர் காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் பொறுப்பேற்ற பிறகு மாநகரில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் நகரின் முக்கிய வாகன போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து இடையூறுகளை சீர்படுத்தவும், வாகன விபத்துகளை தடுக்க பொதுமக்கள் பயணத்தை பாதுகாப்புடன் விபத்தின்றி செல்வதை உறுதிப்படுத்தும் விதமாக போக்குவரத்துத்துறை முன்னேற்றபடுத்தி மேம்படுத்தும் விதமாக வடக்கு-தெற்கு துணை ஆணையர்கள், போக்குவரத்து உதவி ஆணையர்கள் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி முக்கிய சாலை சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து தானியங்கி சிக்னல்களில் புதிய மாற்றங்களை செய்யபட்டு சிக்னல் கம்பம் முழுவதுமாக சிக்னல் விளக்கு எரிய கூடிய வகையில் நவீன படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் அண்ணாசாலை- சிந்தாமணி சந்திப்பு, சஞ்சீவி நகர் சாலை சந்திப்பு போன்ற முக்கிய இடங்களில் புதிதாக ஒளிரும் விளக்கு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனமும், சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி சென்றவர்களை கண்டறிந்து 47.426 பேர்கள் மீது மோட்டார் வாகன வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 102 சதவீதம் அதிகமாகும். அதே போல் அதிக வேகமாகவும் ,சிக்னலை மீறி, செல்போன் பேசிக்கொண்டு, மதுபோதை,வாகனத்தில் அதிக சுமைகளை ஏற்றியும், வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றி சென்றவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 4,84,068 பேர்கள் மீது மோட்டார் வாகன வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இந்த வழக்கு கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகமாகும். மேலும் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்து விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஆபத்தை உணர்த்தும் வகையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி மாநகரில் விபத்துகளை குறைக்கும் வகையில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சாலையில் வாகனத்தில் பயணம் செய்யும் மக்கள் மிகுந்த கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக அரசு கூறிய விதிமுறைகள், மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.