திருவண்ணாமலை: இடைநிலை ஆசிரியர்கள் போட்டி தேர்வு; முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் மூலமாக இடைநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வுகளில் 826 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற (21.07.2024) அன்று தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் மூலமாக இடைநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வுகள் நடைபெறுவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் மூலமாக இடைநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வுகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சி மகளிர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவண்ணாமலை நகராட்சிகுட்பட்ட வி.டி.எஸ் ஜெயின் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் வருகின்ற 21.07.2024 அன்று தேர்வானது நடைபெற உள்ளது. திருவண்ணாமலை நகராட்சி மகளிர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 406 தேர்வர்கள் மற்றும் திருவண்ணாமலை நகராட்சிகுட்பட்ட வி.டி.எஸ் ஜெயின் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 420 தேர்வர்கள் என மொத்தம் 826 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இத்தேர்வானது 21.07.2024 அன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.தேர்வர்கள் 9.30 மணிக்குள்ளாக தேர்வு மையத்திற்குள் வந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். குறிப்பாக அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் பக்தர்களின் வருகை காரணமாக அதிகப்படியான நெரிசல் ஏற்படும் என்பதால் தேர்வர்கள் தேர்வு நடைபெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வு நடைபெறும் நாளன்று போக்குவரத்து துறை சார்பாக தேர்வர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும். தமிழ்நாடு மின்சாரவாரிய செயற்பொறியாளர் எவ்வித மின்தடையும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட காவல்துறை சார்பாக வினாத்தாள்களை கருவூலத்திலிருந்து பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல ஏதுவாகவும் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிக்காகவும் போதிய காவலர்களை நியமிக்க வேண்டும்.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மருத்துவ முகாமுடன் கூடிய மருத்துவ அவசர ஊர்தியினை (ஆம்புலன்ஸ்) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட தீயணைப்புத் துறை சார்பாக தீயணைப்பு வாகனத்தினை தேர்வு மையத்தில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நகராட்சி ஆணையாளர் தேர்வு மையத்தில் தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு தேவையான மின்சார வசதி இருக்கை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில் கட்டடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு முறையாக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? தேர்வு மைய இருக்கைகள் குறித்து தேர்வர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா? தேர்வு நேரத்தில் வினாத்தாள்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.