திருவண்ணாமலையை குளிர்வித்த மழை... ஆங்காங்கே உருவான திடீர் நீர்வீழ்ச்சிகள்
திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக குளிர்ந்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு மாதத்தை கடந்து 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் பதிவாகி வந்தது. அதிகபட்சமாக 104 டிகிரிக்கு மேல் வெப்பத்தின் தாக்கம் பதிவானதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழல் இருந்தது. கோடை விடுமுறை கொண்டாட வெளியில் செல்ல முடியாத அளவில் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக திருவண்ணாமலை நகர் பகுதிகளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அண்ணா நுழைவுவாயில், காந்திசிலை, தேனிமலை, கிரிவல பாதை, அய்யம்பாளையம், வேங்கிகால், அத்தியந்தல், கீழ் அனைக்கரை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமானது முதல் கனமழை வரை மழை பொழிந்தது.
கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பொழிந்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் சிறுவர்கள் சாலையிலும், வீட்டின் மேல் தளத்திலும் மழையில் விளையாடி வருகின்றனர். தொடர் மழை காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக கத்திரி வெயில் துவங்கியுள்ள நிலையில் வெப்பம் வாட்டி வதைக்கும் என்று மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்துள்ளது.
இதேபோல், ஜவ்வாது மலையில் கடந்த ஐந்து நாட்களாக கடும் பணி நிலவி வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் ஜவ்வாது மலையில் கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஜவ்வாது மலையில் இருந்து பேருந்து நிலையம், அத்திமலைப்பட்டு, காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் திடீர் மழையால் ஜவ்வாது மலை மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. இந்த திடீர் நீர்வீழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.