(Source: ECI/ABP News/ABP Majha)
கள்ளச்சாராய விவகாரம்; திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 துணை ஆய்வாளர் உட்பட 60 போலீசார் பணியிடை மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 துணை ஆய்வாளர் உட்பட 60 போலீசார் பணியிடை மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த பதினெட்டாம் தேதி கள்ளச்சாராயம் குடித்து ஏராளமான பொதுமக்களுக்கு கண் பார்வை பாதிப்பு, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியபாக்கம் , புதுச்சேரி ஜிப்மர் ஆகிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பலனின்றி 59 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கள்ள சாராயம் காய்ச்சிபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்கள் மற்றும் விற்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
60 போலீசார் பணியிடை மாற்றம்
அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நடத்திய சோதனையில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1500 லிட்டருக்கும் மேல் கலாச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் தீவிரசோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ள சாராயம் விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 12 துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 60 காவல்துறையினர் இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு சென்று உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.