Jawadhu Hill: கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்த தீ - தமிழகத்தின் அரிய மூலிகைகள் எரிந்து நாசம்
Jawadhu Hill Fire: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏற்பட்ட தீ விபத்தால், அரியவகை மூலிகைகள் எரிந்து நாசமாகின.

Jawadhu Hill Fire: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏற்பட்ட தீ விபத்தால், 2.4 ஹெக்டேர் பரப்பளவிலான நிலம் சேதமடைந்தது.
ஜவ்வாது மலையில் தீ விபத்து:
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலைகளில், கடந்த இரண்டு நாட்களாக (ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை) பற்றி எரிந்த காட்டுத் தீயில் 2.4 ஹெக்டேர் பரப்பளவில் பரவியிருந்த அரிய மருத்துவ மூலிகைகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. வெப்பமான வானிலை மற்றும் காற்று காரணமாக தீ வேகமாகப் பரவியது. இதையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த பல குழுக்கள், கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த தீ விபத்தால் மூலிகைகள், புதர்கள் மற்றும் மரங்கள் எரிந்து, சில பறவைகள் மற்றும் விலங்குகள் இறந்தன.
பரந்து விரிந்த ஜவ்வாது:
கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் தான் ஜவ்வாது மலை. இம்மலைத் தொடர் வேலூர் , திருப்பத்தூர் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 262 ச.கி.மீ பரப்பில் 250 கி. மீ. சுற்றளவில் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் பகுதியில் 205 மலை கிராமங்கள் உள்ளன. ஜவ்வாது மலை அமைந்துள்ள பகுதி மிக நீண்ட கிழக்கு தொடர்ச்சி வனப்பகுதி ஆகும். இந்த கிழக்கு தொடர்ச்சி வனப்பகுதியில் யானை, கரடி, மான், காட்டெருமை மற்றும் அரிய வகை பாம்புகள் , அரிய வகை பறவைகள் அதிகளவில் உயிர்வாழ்ந்து வருகின்றன.
மருத்துவ மூலிகைகள்:
மேலும் அங்கு, தமிழ்நாட்டில் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் உள்ளன. அதன்படி, இந்த இடம் பச்சிலை மருத்துவத்திற்கு பெயர் பெற்றது. இந்த மலையில் கிடைக்கும் மூலிகைகளை வைத்து, பல அரிய வகை நோய்களை கூட குணப்படுத்தும் பச்சிலை வைத்தியர்களை அந்த பகுதியில் காணலாம். அத்தகைய மூலிகைகள் தான் தற்போது ஏற்பட்ட தீ விபத்தால் எரிந்து நாசமாகியுள்ளன.
இத்தனை சுற்றுலா தளங்களா?
பச்சிலை வைத்தியம் மற்று விவசாயம் மட்டுமின்றி, மலைக்கு மேல் பீமன் நீர்வீழ்ச்சி, அம்ரிதி நீர்வீழ்ச்சி, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி என சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற இடங்களும் உள்ளன. எரியில் படகு சவாரி, ட்ரெக்கிங், கேம்பிங், பாரா கிளைடிங் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், செண்பகாதோப்பு அணை, மிருகண்டா நதி அணை போன்றவை அழகிய பாய்ண்ட்களை கொண்டுள்ளன. இங்கே மிகப்பெரிய வைனுபாப்பு அப்சர்வெட்டரி எனும் வானத்தை காணும் தொலைநோக்கி உள்ளது. இதன் வழியாக நிலவை மிக அருகில் எட்டிப் பார்க்கலாம். சனிக்கிழமைகளில் மட்டும் மாலை 7 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு வானத்தை காண அனுமதி தரப்படுகிறது. மேல்பட்டு எனும் கிராமத்தில் உள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் மத்தி மரம் மிகவும் பிரபலமானது. இதில் 100 க்கு கணக்கான சிறுகிளைகள் தென்படுகின்றன.





















