பெற்றோர் கல்வி கற்கவில்லை என்றாலும் குழந்தைகளை கல்வி கற்க செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியர்
கிராம சபா கூட்டத்தில் குழந்தை திருமணம் செய்வதை தவிர்க்கவேண்டும் 18 வயதில் திருமணம் என்ற சட்டம் இருந்தாலும் 21 வயதிற்கு மேல் பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்கின்ற பொழுது அவர்களது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்
78- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார். உடன் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மணி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது;
அரசின் திட்டங்கள் ஊரகப்பகுதிகளில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வதற்காகவும், அரசின் சார்பாக கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய அவசிய வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றது. அதேபோன்று அரசின் சார்பாக
செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து கிராமப்பகுதியில் உள்ள மக்களுக்கு கிராம சபை கூட்டங்கள் மூலமாக
விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றது. பொதுவாக கிராமப்பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவை சுகாதாரமான
குடிநீரை கிராமப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழங்கிடவும் நமது மாவட்டத்தில் ஐந்தாயித்திற்கும் மேற்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அனைத்து 15 நாட்களுக்கு ஒருமுறை முழுவதுமாக தூய்மையாக சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மழைகாலங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் தவிர்க்கப்படும். ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் ஊராட்சிக்கு தேவையான பல்வேறு திட்ட பணிகள், நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. அதிகபட்ச சம்பளமாக நாளொன்றுக்கு ரூபாய் 319 வழங்கப்படுகிறது. மேலும் நமது மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, கட்டிடத்தின் அமைப்பு மற்றும் தரம் குறித்து கணகெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களுடன் தரமான அங்கன்வாடி மையமாக உணவு பொருட்கள் பாதுகாப்பு வசதியுடன் சமையல் கூடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை வசதிகளுடன் தரம் உயர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி என்பது மிக முக்கியம். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வியை கட்டாயம் வழங்க வேண்டும், குழந்தைகள் இடைநிற்றல் கூடாது. குழந்தை திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பதினெட்டு வயதில் திருமணம் என்ற சட்டம் இருந்தாலும் 21 வயதிற்கு மேல் பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்கின்ற பொழுது அவர்களது உடல் மற்றும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பெற்றோர்களாகிய நீங்கள் கல்வி கற்கவில்லை என்றாலும்
கட்டாயம் குழந்தைகளை கல்வி கற்க செய்ய வேண்டும். கல்வி தான் மிகப்பெரிய செல்வம். கல்வியை தொடர்ந்து பெறுவதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. நமது மாவட்டத்தில் தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிப்பதற்காக கையடக்க மடிக்கணினி வழங்கப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், உணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு மேற்கொள்ளுகிறோம். கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்றல் அந்த பொருட்களை பதுக்கி வைத்தால் போன்ற செயல்களை எவரேனும் செய்வது தெரிய வந்தால் உடனடியாக கிராம மக்கள் அந்த தகவலை 10581 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும், தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் இரகசியம் காக்கப்படும்.
போதைப்பொருட்கள் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாவதை தவிர்க்கும் பொருட்டு பள்ளி அருகாமையில் உள்ள பகுதிகள் மற்றும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் எந்த மாதிரியான உணவுப்பொருட்கள் வாங்கி சாப்பிடுகின்றனர் என்பதை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குழந்தை திருமணங்களை செய்கின்ற பொழுது அடுத்த தலைமுறை பின்தங்கி விடுகின்றனர். உறவுகளுக்குள் சிக்கல் ஏற்படுகிறது, விவகாரத்து காரணங்களால் குழந்தைகள் தனிமையாக்கப்படுகின்றன, குற்ற பின்னனி உடையவராகவோ அல்லது பிறக்கும் பொழுதே மாற்றுத்திறனாளி தன்மையுடைய குழந்தைகளாக உருவாகின்றனர். ஆகவே குழந்தை திருமணங்களை அறவே தவிர்க்க வேண்டும். எனவே அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள். வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.