கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் மகளிர் காங்கிரஸ் நூதன போராட்டம்
சிலிண்டர் விலை உயர்வை குறைத்திட வேண்டும் இல்லையெனில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை காங்கிரஸ் பேரியக்கம் நடத்தும் என்ற எச்சரிக்கையை மத்திய அரசுக்கு தெரியப்படுத்துகிறோம்
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. குறிப்பாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டு ரூ.1,103-ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அதேபோல, வணிக பயன்பாட்டு உருளை விலை ரூ. 350.50 அதிகரிக்கப்பட்டு ரூ. 2,119.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாநகர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் வண்ணார்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு சந்தனம், குங்குமம் வைத்தும் பெண்கள் தாயார் அடித்தும் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கூறுகையில், சிலிண்டரின் விலை 1200 ரூபாயை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. வாரந்தோறும் அதன் விலையை ஏற்றி கொண்டிருக்கிறது மத்திய அரசு. எனவே இந்த விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என இந்தியா முழுவதும் மகளிர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே உடனடியாக சிலிண்டர் விலை உயர்வை குறைத்திட வேண்டும் இல்லையெனில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை காங்கிரஸ் பேரியக்கம் நடத்தும் என்ற எச்சரிக்கையை மத்திய அரசுக்கு தெரியப்படுத்துகிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர பாண்டியன் உட்பட மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதே போல நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார் புரத்தில் சமையல் எரிவாய் விலை உயர்வை கண்டித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் மகளிர் காங்கிரஸ் சார்பில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடை கட்டி நூதன போராட்டம் நடத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..