தொடர்ச்சியாக ஊருக்குள் புகும் வனவிலங்குகள்..! பெண்ணை கடித்து குதறிய கரடி..! பீதியில் நெல்லை மக்கள்..!
நெல்லையில் தொடர்ச்சியாக வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து மக்களை காயப்படுத்தி அச்சுறுத்துவதும், ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் பீதி.
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான், மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. குறிப்பாக இவை தற்போது இரை தேடி அடிக்கடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகி வருவது. அதோடு ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவது, ஆடு, மாடுகளை மற்றும் பொதுமக்களை தாக்குவது என அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன் தினம் பிற்பகலில் பட்டப்பகலில் மணிமுத்தாறு அருகே சாலையில் சுற்றித்திரிந்த கரடியை பார்த்த சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்ததை தொடர்ந்து அங்குள்ள மரங்களில் தஞ்சம் அடைந்தது. இதனையடுத்து அச்சமடைந்த கரடி மரஉச்சியில் இருந்து கீழே இறங்காமல் அங்கேயே தஞ்சமடைந்த நிலையில் வனத்துறையினர் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து மறுநாள் அதிகாலை 1.30 மணி அளவில் மரத்திலிருந்து கீழே இறங்கி வனத்திற்குள் சென்றதாக வனத்துறை தகவல் தெரிவித்தனர்.
இதேபோல சிவந்திபுரம், கோட்டைவிளைப்பட்டி, டாணா உள்ளிட்ட பகுதிகளில் சாலையிலும், வீட்டின் காம்பவுண்ட் சுவர் அருகேயும் இரவு நேரத்தில் சுற்றி திரியும் கரடி குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியானது. இதனிடையே சிறுத்தைகளும் தொடர்ச்சியாக ஊருக்குள் புகும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அனவன்குடியிருப்பு, வேம்பையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆடு, மாடுகளை தாக்கி வந்த சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது தொடர்ச்சியாக அடுத்தத்தடுத்த நாட்களில் 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கிய நிலையில் அதனை அடர் வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விடப்பட்டது. இவ்வாறு கரடி, சிறுத்தைகள் மட்டுமல்லாது குரங்குகளும் பொதுமக்களை கடித்த செய்தியும் வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை களக்காடு அருகே கக்கன் நகர் தெற்கு தெருவைச் சேர்ந்த அய்யாபிள்ளை என்பவரது மனைவி பவானி (55) ஊருக்கு அருகே உள்ள தோட்டத்தில் மாடுகளுக்கு தீவனமாக வாழைக்கன்றுகளை அறுக்க சென்றுள்ளார். அப்போது வனத்திலிருந்து வெளியே வந்த கரடி ஒன்று வாழைத்தோட்டத்தில் பதுங்கி இருந்துள்ளது. அப்போது பவானியை பார்த்ததும் திடீரென்று விரட்டி சென்று அவரை தாக்கியுள்ளது. இதனால் அவர் கூச்சலிடவே காலில் கடித்து குதறிய நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. கரடியின் தாக்குதலால் காலில் பலத்த காயமடைந்த பவானி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு களக்காடில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்த நிலையில் தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அப்பகுதியில் சுற்றி திரியும் கரடி வனத்திற்குள் சென்று விட்டதா? அல்லது அங்கேயே புதர்களில் பதுங்கி இருக்கிறதா என வனத்துறையினர் ஆய்வு செய்து அதனை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து மக்களை காயப்படுத்தி அச்சுறுத்துவதும், ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர். வனத்திலிருந்து அடிக்கடி வன விலங்குகள் ஊருக்குள் வருவதன் காரணம் என்ன? அவைகள் வனத்திலிருந்து கீழே இறங்காமல் எது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையறிந்து அரசும், வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.