விருதுநகர் சிறையில் கைதிகளுக்குள் மோதல்; 2 கைதிகள் காயம் - நடந்தது என்ன?
சிறையில் 200 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 250 கைதிகள் அதிகமாக இருப்பதால் அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பறை மற்றும் குளியல் போன்ற வசதிகளை பயன்படுத்துவதில் கைதிகளுக்கு இடையே மிகுந்த சிரமம் ஏற்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்ட கருவூலம் அருகே மாவட்ட சிறை இயங்கி வருகிறது. 200 கைதிகளை அடைக்கும் வசதி கொண்ட இந்த சிறையில் 10 அறைகளில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என மொத்தம் 255 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். 1வது மற்றும் 3 வது அறைகளில், கொலை வழக்கில் கைதான மதுரை மற்றும் திண்டுகல்லைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சிறையில் 3வது அறையில் அடைக்கப்பட்டிருந்த அஸாம் மாநிலத்தைச் சேர்ந்த எலிமுதின் அகமது (39) என்பவரிடம் பீடி கேட்டு அவரை சிலர் தாக்கியுள்ளனர். திருட்டு வழக்கு தொடர்பாக திருத்தங்கல் போலீஸாரால் எலிமுதின் அகமது கைது செய்யப்பட்டவர். இவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், எலிமுதின் அகமது, ஒரு கொலை வழக்கு தொடர்பாக மதுரை திருநகர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பறவையைச் சேர்ந்த சரவணகுமார் (25) ஆகியோர் காயமடைந்தனர். இதனால் கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரையைச் சேர்ந்த வடிவில் முருகன் என்பவர் 3வது அறையில் இருந்து வேறு அறைக்கு மாற்றப்பட்டார். இதை கண்டித்து 3வது அறையில் இருந்த மற்ற கைதிகள் கூச்சலிட்டும் விசில் அடித்தும் சிறை கதவு கம்பிகளை தட்டியும் கலவரத்தை ஏற்படுத்தினர்.
சிறை துணை கண்காணிப்பாளர் ரமா பிரபா மற்றும் காவலர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தும் முடியவில்லை. அதையடுத்து திண்டுக்கல்லில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் 1வது மற்றும் 3வது அறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை மதுரை மற்றும் திருநெல்வேலி சிறைகளுக்கு இடமாற்றம் செய்ய சிறைத்துறை போலீஸார் திட்டமிட்டனர். தகவல் அறிந்த சிறைத்துறை டிஐஜி பழனி, கூடுதல் எஸ்.பி. பரசுராமன் விருதுநகர் மாவட்ட சிறையில் விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து பிரச்சனையை கட்டுப்படுத்த 1வது அறையில் அடைக்கப்பட்டு இருந்த கண்ணபிரான் உள்ளிட்ட 13 கைதிகள் மதுரை மத்திய சிறைக்கு இடம் மாற்றம் செய்வதற்காக சிறையில் இருந்து வெளியே அழைத்துவரப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறை வேனில் ஏற்றப்பட்டனர். அப்போது ஆவேசம் அடைந்த கைதிகள், வேனில் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை தலையால் முட்டி உடைத்து கூச்சலிட்டனர். கைதிகளில் ஒருவர் சிதறி விழுந்த கண்ணாடி துண்டுகளை கைகளில் எடுத்து முகத்தில் பூசி முகம் முழுவதும் ரத்த காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
அதையடுத்து விருதுநகர் மாவட்ட சிறை வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் 11 கைதிகள் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 3 வாகனங்களில் திருநெல்வேலி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விருதுநகர் மாவட்ட சிறையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.