”அன்றே சொன்னார் பெரியார்; இன்று உதயநிதியை ஒரு இளம் பெரியார் என்றே சொல்லலாம்” - கே.எஸ்.அழகிரி
நூறு ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னதை தற்போது உதயநிதி சொல்லியிருக்கிறார். அதனால் இவரை இளம் பெரியார் என்று சொல்லலாம் என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் அவரது முழு உருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மாவட்ட செயலாளர் சங்கர பாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, ”பாஜகவினர் பேச மட்டுமே செய்வார்கள். பாஜகவில் உள்ளவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஒரு ஜீவன் கூட பங்கேற்கவில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சியே மேல் என்று சொன்னவர்கள் பாஜகவினர். சுதந்திர போராட்ட வீரர்களை பாஜகவில் உள்ளவர்கள் காட்டி கொடுத்தவர்கள். காங்கிரஸ், பொதுவுடமை கட்சிகள், திராவிட இயக்கங்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தன. பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ளவர்கள் ஒருபோதும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது கிடையாது. பாஜகவில் உள்ளவர்கள் யாரும் ஒரு மணி நேரம் கூட ஒரு போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று சிறை சென்றவர்கள் கிடையாது. பாஜகவின் வரலாறு ஒரு துரோக வரலாறு. உத்திரபிரதேச சாமியார் கூறிய கருத்து சனாதனத்தின் கொடூரத்தை காட்டுகிறது. ஒரு கருத்தைச் சொன்னால் தலையை எடுத்து விடுவேன் என்று சொல்லும் அவர்களை விட மிகப்பெரிய வன்முறை வாதிகள் கிடையாது. கருத்து சொன்னாலே தலை போய்விடும் என்றால் தேசத்தின் ஜனநாயகம் எங்கு உள்ளது. அந்த தேசத்தை ஆளும் கட்சி , எவ்வளவு பெரிய சர்வாதிகார கட்சி., பாஜகவையும், ஆர்எஸ்எஸ் ஐயும், நாங்கள் ஹிட்லர் முசோலினி என சொல்வது பொருத்தமானது என்பதற்கு இந்த கருத்து உலகத்திற்கே உதாரணம் ஆனது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபால் சனாதனம் குறித்த கருத்துக்கு தெளிவான பதிலை கொடுத்துள்ளார். அனைவருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு எல்லோரும் தங்களது கருத்துக்களை சொல்லலாம். எல்லை தாண்டி மட்டுமே போகக்கூடாது. சனாதனம் கூடாது என புதிதாக யாரும் சொல்லவில்லை. ஆயிரம் ஆண்டுகளாக இந்த கருத்துக்கள் நிலவுகிறது. கடவுள் மீதும் மதத்தின் மீது நம்பிக்கை உள்ள ராமானுஜர் தலித்துகளையும் விளிம்பு நிலை மக்களையும் அழைத்து வந்து பூணூல் அணிவித்து அந்தணர் ஆக்கினார். உதயநிதி ஸ்டாலின் சொன்னதில் எந்த தவறும் இல்லை. அவர் புதிதாக எந்த தகவலையும் சொல்லவில்லை நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் சொன்னதை தற்போது அமைச்சர் உதயநிதி சொல்லி உள்ளார். உதயநிதி ஸ்டாலினை இளம் பெரியார் என்று சொல்லலாம் அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்து மட்டும் தான் அவர் சொல்லியிருக்கிறார். அவருக்கு உரிமை உண்டு. அறிவிலிகள் மத்தியில் வாழ்வது மிகப் பெரிய சிரமம் சனாதனம் கூடாது என்றால் இந்து மதத்திற்கு விரோதம் என்று ஏன் நினைக்கிறார்கள்.
சனாதனம் என்பது பழமை வாதத்தை, தீண்டாமையை , பெண் அடிமையை நிலை நிறுத்துவது. பிறப்பின் இலட்சியத்தை ஈடேற்றுங்கள் என சனாதனத்தின் மூலம் நாகரீகமாக சொல்கிறார்கள். அதற்கு எதிரான கருத்துக்கள் எதிரான சனாதனம் என்று சொல்லப்படுகிறது. சனாதனத்திற்கு எதிராக பேசினால் இந்து மதத்திற்கு எதிராக பேசுவதாக சொல்வது என்பதை எப்படி சொல்லமுடியும். கண்ணை திற என்றால் வாயை திறக்கும் கும்பலாக திகழ்கிறது. எது கண் எது வாயென்றே தெரியாத நிலையில் அவர்கள் இருக்கின்றனர். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதி ஸ்டாலினின் கருத்தை கேட்டு இந்து அறநிலையத்துறையை மூடநம்பிக்கை இல்லாத துறையாக அமைச்சர் சேகர்பாபு மாற்ற வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டது தப்பு கிடையாது. அதற்காக அவரை நீக்க வேண்டியதும் கிடையாது” என தெரிவித்தார்