Sterlite Sale: அனில் அகர்வால் ஸ்டெர்லைட் விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்து இருக்கோம், தொடர்ந்து கண்டிப்பாக நடக்கும்.மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கனும், விக்கனும் என்பதை அனில் அகர்வால் மறுபரிசீலனை செய்ய வேண்டும், அதற்கு தான் இந்த போராட்டம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவை அதன் உரிமையாளர் கைவிடவேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இயங்கி வந்தது. வேதாந்தா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வந்த இந்த ஆலை, காப்பர் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய மிகப் பெரிய பங்காற்றியது. இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் பலர் போராட்டம் நடத்தியதன் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு இந்த ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பல்வேறு கிராம மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது ஒருபுறமிருக்க ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பல்வேறு காரணங்களால் இந்த வழக்கு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இதனிடையே வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை விற்பனை செய்யப்போவதாக பத்திரிகைகைகளில் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரம் பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு கிராம மக்கள் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை விற்கும் முடிவை வேதாந்தா குழுமம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோரிஸ்புரம், அய்யனடைப்பு, சில்லாநத்தம், சாமிநத்தம், புதூர் பாண்டியபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், ஏ.குமரெட்டியாபுரம், மீளவிட்டான், மடத்தூர்,வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி,தெற்கு வீரபாண்டியபுரம், ராஜாவின் கோவில், நடுவக்குறிச்சி, சில்லாநத்தம் பஞ்சாயத்து, சங்கரபேரி, பண்டாரம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள முக்கிய சாலையில் அமர்ந்திருந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வேதாந்தா குழுமம் தலைவர் அனில் அகர்வால் ஸ்டெர்லைட் நிறுவனத்தை விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற பேனரை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், உண்ணாவிரதம் போராட்டம் ஆரம்பித்து இருக்கிறோம். தொடர்ந்து கண்டிப்பாக நடக்கும். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கனும், விக்கனும் என்பதை அனில் அகர்வால் மறுபரிசீலனை செய்ய வேண்டும், அதற்கு தான் இந்த போராட்டம், அரசுக்கு எதிராக அல்ல, காவல்துறை நாங்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது உட்காரக்கூடாதுன்னு சொல்றாங்க, நாங்க சாப்பாட்டுக்கு வழியில்லாம உட்கார்ந்து இருக்கோம், நாங்க ரோட்டில் உட்காரவில்லை, பொதுமக்களுக்கு இடையூறு செய்யவில்லை என்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்