வடமாநிலத்தவர் அதிகம் வரும் ராமநாதபுரத்தில் தவிக்கும் ரயில் பயணிகள்
உரிய பாதுகாப்பு, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்பதிவு பெட்டிகளை அறிந்துகொள்ளும் வகையில் கோச் இன்டிகேட்டர்கள் எரிய துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை
ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் எரியாத கோச் இன்டிகேட் உள்ளிட்ட அடிப்படை வசதி குறைவு காரணமாக இரவு நேரங்களில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகர் மாவட்ட தலைநகர் மட்டுமின்றி வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது. ராமநாதபுரத்தை சுற்றிலும் பல முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன. குறிப்பாக திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை, ஏர்வாடி, தேவிபட்டினம் போன்ற இடங்களுக்கு தினமும் வடமாநில பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிகஅளவில் வந்து செல்கின்றனர். ஆனால், ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி சரிவர செய்யப்படவில்லை.குடிநீர் வழங்கும் குழாய்களில் தண்ணீர் வசதி செய்யப்படவில்லை.ரயில் குறித்த அறிவிப்பிற்கான டிஸ்பிளே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படவில்லை. டிஸ்பிளே (கோச்பொசிசன்) வசதியும் இல்லை.
இரண்டாவது பிளாட்பார்ம் முழுமையாக அமைக்கப்படவில்லை. மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் ரயில் இன்ஜின் மாற்ற கூடுதல் தண்டவாள வசதி இல்லை.மேலும் இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் அயோத்தி எக்ஸ்பிரஸ், வாரணாசி எக்ஸ்பிரஸ்,அஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரயில்களை ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்துவதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு இருமார்க்கத்திலும் ரெயில்சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு சிறப்பு ரெயில்கள் வாராந்திர சேவையாக இயக்கப் பட்டு வருகிறது. கீழக்கரை, பெரியபட்டிணம், ஏர்வாடி, பனைக்குளம், புதுவலசை, தேவிபட்டினம், ஆர்.எஸ், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சவுதி, மலேசியா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி நகரங்களுக்கு ரெயில் மூலம் சென்று அதன்பின்னர் விமானம் மூலம் அயல்நாடுகளுக்கு செல்கின்றனர். ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் உள்ளிட்டோர் ராமநாதபுரம் ரெயில் நிலையம் வழியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பயணிகளுக்கு போதுமான வசதிகள் ரெயில்நிலையத்தில் இல்லை. இதில் குறிப்பிடத்தக்கது பழுதான கோச் இன்டிகேட்டர்தான். ரெயில் நிலையத்தில் பல மாதங்களாக இவை எரியாமல் உள்ளது. பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் முன்பதிவு ரெயில் பெட்டிகள் எங்கு நிற்கும் என அறிந்துகொள்ளும் கோச் இன்டிக்கேட்டர் போர்டுகளும் எரிவதில்லை.
இதனால் ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவு பெட்டிகளை இரவு நேரங்களில் பயணிகள் தேடுவதற்கு சிரமம் அடைகின்றனர். இதனால் நேரம் வீணாகிறது. பரபரப்பு பதட்டத்துடன் முன்பதிவு பெட்டிகளை தேடுவதும். இந்த நேரத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் ஆசாமிகள் தங்களது கைவரிசைகளை காட்டும் சம்பவங்களும் தொடர் கதையாக நடந்து வருகின்றன. பணத்தை பறிகொடுத்தவர்கள் புகார் செய்வதற்கு நேரமில்லாமல் பணத்தை இழந்து வேதனையுடன் செல்கின்றனர். ரெயில்வே நிர்வாகம் இது தொடர்பாக உரிய பாதுகாப்பு, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்பதிவு பெட்டிகளை அறிந்துகொள்ளும் வகையில் கோச் இன்டிகேட்டர்கள் எரிய துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.