குடிநீர் கேட்டு நடந்த சாலை மறியல் முதல் மாற்றுத்திறனாளிகள் கைது வரை - நெல்லையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 1001 சுய உதவி குழு மகளிருக்கு காணொளி காட்சி வாயிலாக பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடன் உதவிகளை வழங்கினார்
பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி போராடத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அவர்கள் பாதுகாவலர்களுடன் வந்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் அமர்ந்த படி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் அவர்களை கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர்.
குடிநீர் கேட்டு நெல்லை - சங்கரன்கோவில் சாலையில் மறியல் போராட்டம்
நெல்லை மாநகர் டவுண் அருகே உள்ளது நதிப்புரம் கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக உறை கிணறுகள் நீரில் மூழ்கி மாநகரின் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வது தடைபட்டது, குறிப்பாக நதிப்புரம் கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும் பொழுது, கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் குடிநீர் விநியோகம் என்பது இல்லை, முன்னதாக வந்த குடிநீரும் சாக்கடை கழிவு நீர் கலந்து சுகாதாரமற்ற முறையில் விநியோகம் செய்யப்பட்டது, இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர், எனவே சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர், தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
மழை பாதிப்பால் ஏற்பட்ட இழப்பீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
குறிப்பாக குறுவை நெற்பயிர் விளைந்து கதிர் முற்றிய நிலையில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி அழிந்த பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும், தாளடி, சம்பா பயிர் நடவு செய்து அழுகி சேதமடைந்துள்ள விவசாயிகள் குடும்பங்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும், தொடர் மழை காரணமாக ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் உயிர் பலியாகின, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வேலைவாய்ப்பு வருமானத்தை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும், மழை வெள்ளப் பாதிப்பால் இறந்து போனோரின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர், தொடர்ந்து தங்களின் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்து சென்றனர் .
மகளிருக்கு ரூபாய் 63.7 கோடியை கடன் உதவியாக வழங்கிய முதல்வர்
நெல்லையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற 13 ஆயிரத்து 864 மகளிருக்கு ரூபாய் 63.7 கோடியை கடன் உதவியாக காணொளி காட்சியின் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார், அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த காணி இன மக்கள் இன்று நேரில் சென்று தேன் மற்றும் மிளகினை முதல்வருக்கு பரிசாக வழங்க உள்ளனர், தமிழக அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவி வழங்கும் விழா பாளையங்கோட்டை நூற்றாண்டு விழா மண்டபத்தில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 1001 சுய உதவி குழுக்களை சேர்ந்த 13 ஆயிரத்து 764 மகளிருக்கு ரூபாய் 63.7 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்,