தென்காசி கொலை வழக்கு.. 4 பேருக்கு தூக்கு.. திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தென்காசியில் சாதி மோதலின்போது 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நடைபெற்ற மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் நடைபெற்ற காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகிய மூவர் கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு மாலை 7 மணிக்கு ஒத்திவைப்பட்டது.
அதிரடி காட்டிய திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம்:
நெல்லை வன்கொடுமை நீதிபதி இவ்வழக்கில் தொடர்புடைய பொன்னுமணி கண்ணன்,குட்டி ராஜ், குருசாமி உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பொன்னுமணி, சுரேஷ்,உலக்கன் ஆகியோர் உடலில் குறைவு காரணமாக நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குற்றவாளிகள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி அறிவுறுத்திய நிலையில் 11 பேரும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். கடந்த 24 ஆம் தேதி குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தண்டனை விபரங்களை அறிவிக்க மீண்டும் விசாரணை மதியம் 4 மணிக்கு தொடங்கிய நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பின் விவரம்:
மீண்டும் இரவு 8-30 மணிக்கு நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு குறித்த தகவல்களை வெளியிட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு, திருவேங்கடத்தில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மூவரை கொலை செய்த குற்றத்திற்காக வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மீதம் உள்ள 5 நபருக்கு தலா 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2 பேருக்கு 2 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நெல்லை வன்கொடுமை நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் தீர்ப்பு வழங்கியுள்ளார்.