ஆயிரக்கணக்கான மாணவிகள் ஒரே நேரத்தில் 2 கழிப்பறையில் குவியும் அவலம்..! எஸ்டிபிஐ போஸ்டரால் பரபரப்பு..!
இலவசத்திற்கு ஒதுக்கப்படும் பணத்தை விட மாணவிகள் உடல் நலமே முக்கியம் என கூறி போராட்டம் செய்ய தூண்டாதீர்கள் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட பத்தமடை பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது. இதில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏறத்தாழ 1000க்கும் மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். குறிப்பாக ஏற்கனவே இந்த பள்ளி மிகச்சிறிய இடத்தில் இயங்கி வரும் நிலையில் இந்த பள்ளிக்கென்று விளையாட்டு திடலோ அல்லது கழிப்பறைகளோ இல்லை எனக் கூறியும் அதனை உடனடியாக அமைத்து தர கோரியும் பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக பத்தமடை பக்கத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவிகள் அரசு பேருந்துகளில் இங்கு வந்து தான் கல்வி பயின்று செல்கின்றனர்.
இந்த நிலையில் இங்கு கல்வி பயிலும் ஆயிரம் மாணவிகளுக்கும் சேர்த்து மொத்தமாக நான்கு கழிப்பறைகள் உள்ளதாகவும் அதில் இரண்டு கழிப்பறைகளை ஆசிரியர்களுக்காக எடுத்துக் கொண்ட நிலையில் மீதமுள்ள இரண்டு கழிப்பறைகள் மட்டுமே ஆயிரம் மாணவிகளுக்கான பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இடைவேளை நேரங்களில் நூற்றுகணக்கான மாணவிகள் கழிப்பறையின் வாசலில் குவிந்து காத்திருப்பதால் அங்கு கடும் சிரமத்திற்கு ஆளாவதாக மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் பலர் கழிப்பறைக்கு செல்வதே இல்லை என்றும், காலை வீட்டில் வைத்து சிறுநீர் கழித்துவிட்டு வரும் நிலையில் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று தான் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மாணவிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு அனைத்து மாணவிகளும் இரண்டு கழிப்பறையை பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்படுவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த அரசு பள்ளிக்கு எதிரில் தமிழக அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி தரப்பில் வால் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசே! கல்வித்துறையே! பத்தமடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேவையான கழிவறைகளை போர்க்கால அடிப்படையில் சுகாதாரமாக அமைத்துக்கொடு, மாணவிகளை சிரமங்களுக்கு ஆளாக்காதே, இலவச திட்டங்களின் பெயரைச் சொல்லி கண்ணாமூச்சி ஆடாதே! மாணவிகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதே, மக்களை போராட தூண்டாதே! என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளியின் அருகே எஸ்டிபிஐ சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் விவகாரம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.