நெல்லையில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நந்தவனத்தை மீட்கக்கோரி பக்தர்கள் ஒற்றைக்காலில் போராட்டம்
கோயில் முன்பு ஒற்றை காலில் நின்றவாறு சிவநாமம் பாடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நந்தவனத்தை மீட்க பிரார்த்தனை மேற்கொண்டனர்.
நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற அழியாபதி ஈஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு முன் பகுதியில் 39.52 சென்ட் நிலம் கோவில் நந்தவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் சில நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நந்தவனம் பயன்பாட்டுக்கு இல்லாத நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நந்தவனத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வலியுறுத்தி பக்தர்கள் சார்பில் கோவில் செயல் அலுவலர், அறநிலையத்துறை உயரதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சுவாமி அழியாபதி ஈஸ்வரரிடம் விண்ணப்பம் கொடுத்து பிரார்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று பக்தர்கள் பிரார்த்தனை போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து நெல்லை சந்திப்பு காவல் உதவி ஆணையாளர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர். அப்போது அறிவித்தப்படி பக்தர்கள் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு வருகை வந்ததோடு கோயில் முன்பு ஒற்றை காலில் நின்றவாறு சிவநாமம் பாடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நந்தவனத்தை மீட்க பிரார்த்தனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்தர்கள் தரப்பில் உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த சூழலில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நில அளவை பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பிரச்சனைக்குரிய இடம் அளவீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இடம் கோவில் நந்தவனம் என கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இடத்தை மீட்டு தருவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் உறுதி அளித்ததை தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர். இருப்பினும் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை அதிகாரிகளும் புகார் அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.