தொடரும் உட்கட்சி பூசல்- நெல்லையில் கவுன்சிலர்கள் வெளியிட்ட பரபரப்பு நோட்டீஸ்..! கூட்டத்தை ஒத்தி வைத்த மேயர்..! நடந்தது என்ன?
"உட்கட்சி பூசல் காரணமாக நெல்லை மாநகராட்சியில் மக்கள் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக மற்ற கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இன்றைய கூட்டமும் நடைபெறாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது"
நெல்லை மாநகராட்சியில் மேயர் சரவணன் தலைமையில் இன்று 4.30 மணிக்கு சாதாரண கூட்டமும், 5 மணிக்கு அவசரக் கூட்டமும் நடைபெறுமென்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநகராட்சி ஆணையாளர் வந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில் 6 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் 51 பேர் அதிமுக கவுன்சிலர்கள் 4 பேர் என மொத்தம் 55 பேர் உள்ளனர். இதில் இன்றைய கூட்டத்திற்கு 6 பேர் மட்டுமே வந்திருந்த நிலையில் திமுக மற்றும் தோழமைக் கட்சி கவுன்சிலர்களின் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் இன்றைய கூட்டத்தில் கீழ்கண்ட நியாயமான காரணங்களுக்காக மாநகராட்சி அனைத்து வார்டு பொதுமக்களின் நலன் கருதி கலந்து கொள்ள இயலாத நிலையில் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம்.
பொதுமக்களின் அத்தியாவசிய அவசர தேவையான மழைநீர் வடிகால், கழிவுநீர், குடிநீர் பகிர்மான குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், பள்ளி கட்டடங்கள் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டும் அதற்கான இன்றைய சாதாரண மற்றும் அவசர கூட்டத்தில் இடம் பெறாமல் மேயர் சரவணனின் சுய நலன் கருதி இப்பணிகள் ஒப்புதல் வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் மாமன்ற உறுப்பினர்கள் மேயரிடம் கோரிக்கை வைத்தும், 26.06.24 அன்று மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆணையாளரிடம் வலியுறுத்தியும், மேயர் தீர்மானங்கள் எதையும் சேர்க்கவில்லை. கோப்புகள் பெரும் அளவில் தேங்கி உள்ளன. ஆகவே மேயரின் ஏதேச்சையான அராஜக போக்கினை கண்டித்து இன்றைய கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என நோட்டீஸ் வெளியிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து 5 மணி வரை கூட்டம் நடைபெறாததால் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர். கூட்டம் நடைபெறுமா? நடைபெறாதா நாங்கள் மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக தான் மாமன்றம் வருகிறோம். ஆனால் யாரும் வரவில்லை என்று பேசிய நிலையில் 5.30 மணி வரை 6 உறுப்பினர்களை தவிர யாரும் வராததால் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மேயர் அறிவித்து சென்றார். ஏற்கனவே நெல்லையில் மேயர் கவுன்சிலர்களுக்கிடையே தொடர்ந்து மோதல் போக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு கூட்டமும் பல்வேறு காரணங்கள் காட்டி நடைபெறாமல் இருந்து வந்தது. நாடாளுமன்ற தேர்தல் என நீண்ட நாட்களுக்கு பின் இன்று நடைபெறவிருந்த கூட்டமும் ஆளும்கட்சி கவுன்சிலர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இன்றைய கூட்டமும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. உட்கட்சி பூசல் காரணமாக நெல்லை மாநகராட்சியில் மக்கள் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக மற்ற கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இன்றைய கூட்டமும் நடைபெறாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.