
நெல்லை, குமரியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் இங்கெல்லாம் செல்ல தடை
நெல்லையில் நம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையும், குமரியில் திற்பரப்பு அருவிக்கு செல்ல பேரூராட்சி நிர்வாகமும் தடை விதித்துள்ளது.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது நம்பி கோவில். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள திருமலை நம்பிக்கு பூஜைகள் நடப்பது வழக்கம். அதிலும் தமிழ் மாத கடைசி சனிக்கிழமை நடக்கும் சிறப்பு பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கனமழை எச்சரிக்கை காரணமாகவும் வனத்துறையினர் திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலுக்கு இன்று சென்று தரிசனம் செய்வதற்கும், ஆற்றில் குளிப்பதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் நிலவி வந்த நிலையில் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆகிய அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் 48-அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை அணை அபாய அளவான 42-அடியை தாண்டி தற்போது 44.42 அடியை எட்டிய நிலையில் பேச்சுப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 578-கன அடி மேல் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருவதால் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோதை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் ”குமரியின் குற்றாலம்” என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு திருப்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க இன்று 3-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

