ஓடி விளையாடு பாப்பா- ஓடவும் விளையாடவும் இடமில்லையே தாத்தா- பாரதி பிறந்த ஊரில் சிதிலமடையும் விளையாட்டு உபகரணங்கள்
இந்த பூங்கா தொடர்ந்து எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாத நிலையில் இரவு நேரங்களில் இங்கே சமூக விரோதிகள் மதுபானம் அருந்தும் கூடாரமாக மாற்றிவிட்டனர்.
பாரதி பிறந்த ஊரில் ஓடி விளையாட அமைக்கப்பட்ட பூங்காவில் சிதிலமடைந்த விளையாட்டு உபகரணங்கள்- மது அருந்தும் கூடமாக மாறிப்போன அவலம்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், எட்டையபுரம் நினைவுக்கு வருவது முண்டாசு கவிஞன் பாரதி. ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப எட்டயபுரம் பேருந்து நிலையம் சாலையோர பூங்கா திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு அதில் சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சறுக்கு, ஏற்றம் இறக்கம் போன்ற விளையாட்டு உபகரணங்களுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு நடை பயிற்சி மேற்கொள்ள பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் நடுப்பகுதியில் பூக்கள் வளர்க்கப்பட்டு சிறுவர்கள் விளையாடுவதற்காக உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்கா திறக்கப்பட்டு சில காலம் சிறுவர்கள் விளையாடவும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் உபயோகப்பட்டு வந்தது. காலங்கள் கடந்தன. இந்தப் பூங்கா போதிய பராமரிப்பின்றி உபகரணங்கள் சேதமடைந்தன. மேலும் காலை மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் இங்கு வந்து அமர்ந்து மது குடிக்க துவங்கி விடுகின்றனர். இந்த பூங்காவை சீரமைத்து உபகரணங்களை புதுப்பித்து விளக்கு குடிநீர் கழிப்பறை போன்றவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
எட்டையாபுரம் பேரூராட்சி சார்பில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 15 லட்சத்தில் பூங்கா அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே இந்த பூங்கா பார்க்கப்பட்டது. எட்டயபுரத்தில் வேறு எந்த ஒரு பொழுதுபோக்கும் வசதியும் இல்லாத நிலையில் இந்த பூங்கா மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. இந்த பூங்காவில் போதிய மின்விளக்குகள் அமைக்கப்படாததால் பொது மக்களிடம் போதுமான வரவேற்பு இல்லாத நிலை இருந்தது. மேலும் தொடர்ந்து எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாத நிலையில் இரவு நேரங்களில் இங்கே சமூக விரோதிகள் மதுபானம் அருந்தும் கூடாரமாக மாற்றிவிட்டனர்.
பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. பூங்காவை அழகுப்படுத்த விளையாட்டு உபகரணங்கள் தவிர்த்த பகுதிகளில் பூக்கள் வளர்க்கப்பட்டிருந்தது அவை தற்போது மண்மேடாக காட்சியளிக்கின்றது. மேலும் இயற்கை உபாதைகள் கழிக்கும் இடமாக இந்த பூங்கா முற்றிலுமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். பூங்காவிற்கு வரும் பெண்கள், குழந்தைகள் அந்த பகுதியில் செல்லவே அச்சப்படக்கூடிய அளவில் உள்ளது. பாரதி பிறந்த மண்ணில் மீண்டும் ஓடி விளையாட இடம் கிடைக்குமா ஆர்வத்துடன் உள்ளனர் எட்டையாபுரம் பகுதி மக்கள்.