Lizard: வல்லநாடு மலைப்பகுதியில் புதிய வகை பல்லியினம் கண்டுபிடிப்பு - இந்த பல்லிக்கு என்ன பெயர் தெரியுமா..?
இந்திய அளவில் 53வது பல்லி இனமாகவும், தமிழக அளவில் 7 வது பல்லி இனமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறியவகை பல்லியினம் தனித்துவம் வாய்ந்ததாகும். இதன் முதுகுச் செதில்கள், தொடைப்பகுதி விநோதமாக உள்ளது
இந்தியாவின் தென்கோடி பகுதியில் வெளிமான்களின் வாழ்விடமாக திகழ்வது வல்லநாடு வெளிமான் சரணாலயம். தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டின் ஓரத்தில் வல்லநாட்டில் அமைந்து உள்ள மலைப்பகுதியே இந்த சரணாலயம். தேசிய அளவில் வெளிமான்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து உள்ளது. இதனால் வெளிமான்கள் வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி அட்டவணை 1-ல் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய அரிய வெளிமான்களின் வசிப்பிடமாக வல்லநாடு வெளிமான் சரணாலயம் அமைந்து உள்ளது. 1641.21 எக்டர் பரப்பில் அமைந்து உள்ள இந்த காப்புக்காட்டில் விறுவெட்டி, வெடதாளை, காக்காஒடை, குடைவேலம், உசில், இலந்தை வகைகள் மற்றும் வேம்பு, விராலி, கிலக்கை, கருஇண்டு, கள்ளி, சின்னி, கருந்துளசி ஆகிய தாவரங்கள் உள்ளன.
வெளிமான், எறும்பு திண்ணி, உடும்பு, காட்டுப்பூனை, கீரி, முயல், மலைப்பாம்பு, விரியன்பாம்புகள், சாரைப்பாம்பு, மயில், கொக்கு, நாரை, கவுதாரி, அண்டங்காக்கை, சிறிய கரும்பருந்து, பாம்பு தின்னி பருந்து, காலூ உள்ளான், ஆள்காட்டி குருவி, சிறுபக்கி, வானம்பாடி, கொம்பன் ஆந்தை உள்பட நூற்றுக்கணக்கான உயிரினங்கள் உள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் தேஜஸ் தாக்கரே தலைமையில் தாக்கரே வைல்டு லைவ் பவுண்டேசன் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல் உயிரினங்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்கள் குழு வல்லநாடு காப்புக்காடு மற்றும் கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காப்புக்காடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஊர்வன பாதுகாப்பு ஆய்வாளர்கள் ராமேஸ்வரன் மாரியப்பன் இருந்தார். இதற்காக பார்வதி அம்மன் கோவில், வல்லநாடு காப்புக்காடு, மணக்கரை மற்றும் குருமலை காப்புக் காட்டில் உள்ள பெருமாள் கோவில் அருகே புதிதாக ஒரு பல்லி இனத்தினை கண்டுபிடித்தனர்.
இந்த பல்லிக்கு குவார்ட்சைட் புரூக்லிஷ் கெக்கோ அல்லது தூத்துக்குடி ப்ரூக்கிஷ் கெக்கோ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. பல்லியினத்தை பொறுத்தவரை இந்திய அளவில் 53வது பல்லி இனமாகவும், தமிழக அளவில் 7வது பல்லி இனமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறியவகை பல்லியினம் தனித்துவம் வாய்ந்ததாகும். இதன் முதுகுச் செதில்கள், தொடைப்பகுதி விநோதமாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்